×

தொடர்மழையால் கொடைக்கானல் குடிநீர் தேக்கம் ‘புல்’

கொடைக்கானல்: தொடர்மழையால் கொடைக்கானல் பழைய குடிநீர் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் விநியோகத்திற்கு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு அணை, திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஒரு அணை என 2 அணைகள் உள்ளன. போதிய மழையின்றி கடந்த பல மாதங்களுக்கு முன்பு இந்த 2 அணைகளும் முற்றிலுமாக வற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி கொடைக்கானல் நகர் மக்கள் தவித்து வந்தனர். இந்நிலையில் கொடைக்கானலில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கனமழையால் ஓராண்டுக்கு பின் பழைய குடிநீர் தேக்கம் தனது முழு கொள்ளளவான 22 அடியை எட்டி மறுகால் வழிந்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய குடிநீர் தேக்கத்தில் தனது முழு கொள்ளளவான 26 அடியில் 23 அடி வரை தண்ணீர் இருப்புள்ளது என்றும், தொடர்மழை பெய்யும் பட்சத்தில் 3 நாட்களுக்குள் இந்த குடிநீர் தேக்கமும் நிரம்பி விடும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில், ‘ஓராண்டுக்கு பிறகு பழைய நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டி வழிந்து ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. வழிந்தோடும் தண்ணீரை தேக்குவதற்கு இந்த பழைய அணை கரை 10 கோடி ரூபாய் செலவில் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கரை உயர்த்தப்பட்டால் இந்த தண்ணீரை ஓர் ஆண்டுக்கு சீராக விநியோகிக்க முடியும்’ என்றார். முன்னதாக நகராட்சி ஆணையாளர் முருகேசன், நகரமைப்பு அலுவலர் முருகானந்தம் மேலாளர் குமார் சிங், கணக்காளர் பிச்சைமணி உள்ளிட்டோர் இறைவழிபாடு செய்து அணையில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : Kodaikanal , Kodaikanal
× RELATED கொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு