×

அரசு பஸ்களில் விதிமுறை மீறி வசூல் ‘எக்ஸ்பிரஸ்’ பெயரில் கட்டண கொள்ளை: பயணிகள் கடும் அதிருப்தி

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில், 349 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்திய நிலையில், மலைப்பகுதியில் கூடுதலாக, 20 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மற்ற மாவட்டங்களை விட நீலகிரியில் அரசு பேருந்து கட்டணம் அதிகமாக உள்ளது. சாதாரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.7. அதே நேரத்தில், எக்ஸ்பிரஸ் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம், ரூ.11, ரூ.12 என மாறி, மாறி வசூலிக்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் கடும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து காரணம் கேட்டால், ‘அதிகாரிகள் உத்தரவிட்டதைத் தான் வசூலிக்க முடியும்’ என, நடத்துநர்கள் கூறுகின்றனர். மாவட்டத்தில் இயக்கப்படுகிற பஸ்களில் எது சாதாரண பஸ், எது எக்ஸ்பிரஸ் பஸ் என்ற விவரம் பயணிகளால் அறிய முடிவதில்லை. ‘எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில், 70 சதவீத பேருந்துகள் சாதாரண பேருந்துகளாக மாற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தாலும், தற்போதும் பெரும்பாலான பஸ்கள் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, 80 கி.மீ., துாரத்திற்கு மேல் செல்லும் பஸ்களில், குறைந்தபட்சம், 25 கி.மீ., துாரத்திற்கு ஒரு ‘ஸ்டேஜ்’ என இருந்தால் மட்டுமே ‘எக்ஸ்பிரஸ்’ என இயக்க வேண்டும். ஆனால், இந்த விதி நீலகிரி மாவட்டத்தில் பின்பற்றப்படுவதில்லை.

நீலகிரியில், இயக்கப்பட்டு வரும் அனைத்து பஸ்களிலும், சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்க, வட்டார போக்குவரத்து அலுவலகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால், போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக செயல்பட்டு ‘எக்ஸ்பிரஸ்’ பஸ் என கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கு, குன்னூரை சேர்ந்த மனோகரன் என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், குறைந்தபட்ச கட்டணம் குறித்த விவரம் கேட்டபோது, தகவல் தரவில்லை. மாநில தகவல் ஆணையத்திற்கு முறையீடு செய்ததால், போக்குவரத்து கழகம் தகவல் அளித்தது. அதில், குறைந்தபட்ச கட்டணமே, கூடுதலாக வசூலிப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மக்கள் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ‘‘போக்குவரத்து துறைக்கு நஷ்டம் ஏற்பட்ட கூடாது என்று அமைச்சரின் வாய்மொழி உத்தரவின் மூலமே போக்குவரத்து அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
நீலகிரியை பொறுத்தவரை, அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. நீலகிரியில், போக்குவரத்துக் கழக அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அனுமதியின்றி தன்னிச்சையாக கட்டணம் உயர்த்தி, மக்களை ஏமாற்றி வரும் செயல் நீடிக்கிறது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் மக்களைக் குழப்பி வருகின்றனர். எந்தெந்த ஊர்களுக்கு எந்தெந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதற்கான கட்டண விவரங்கள் உள்ளிட்டவை குறித்து வெளிப்படையாகத் தெரிவிப்பதுடன், அனைத்து பேருந்துகளிலும் கட்டண விவர பட்டியல் வைக்கப்பட வேண்டும், மேலும் இந்த முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய போகிறேன்,’’ என்றார்.

Tags : Passenger robbery ,Government , Government Buses
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்