×

அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் கழிவுநீருடன் கலந்து மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் அவதி

சாயல்குடி: எம்.கரிசல்குளம் அரசு பள்ளிக்குள் கழிவுநீருடன் கலந்து மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கடலாடி ஒன்றியம், எம்.கரிசல்குளம் கிராமத்தில் சுமார் 270க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள வில்வநாதன் கோயில் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர்.

மேலும் இச்சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 86க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று இப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கரிசல்குளம் தெருவில் பெருக்கெடுத்து ஓடிவந்த மழைநீர் தெருக்களில் ஓட வழியில்லாமல் தேங்கி கிடந்த கழிவுநீருடன் கலந்து பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. பள்ளியில் சில வகுப்பறை கட்டிடங்கள் தரைமட்டத்தோடு இருப்பதால், வகுப்பறைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பள்ளியில் இருந்த புத்தகங்கள், செயல்பாட்டு உபகரணங்கள் நனைந்தது. மாணவர்கள் உட்கார இடமில்லாததால், வகுப்பறையில் தேங்கி கிடந்த கழிவுநீருடன் கலந்த மழைத்தண்ணீரை வெளியேற்றினார். மழைக்காலத்தில் தண்ணீர் புகுவது, அவற்றை அப்புறப்படுத்துவதிலும் நேரம் செலவு செய்வதால் பாடம் படிப்பதில் தொய்வு ஏற்படுவதாக மாணவர்கள் புகார் கூறுகின்றனர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்குவதால் பழைய வகுப்பறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர் போன்றவை சேதமடைந்து இடிந்து விழும் அபாயம் இருக்கிறது. தண்ணீர் கிடப்பதால் சளி, காய்ச்சலுடன் தொற்று நோய்கள் பரவி வருவதாக கூறுகின்றனர்.

இது குறித்து எம். கரிசல்குளம் கிராம மக்கள் கூறும்போது, ‘பள்ளி வளாகம் முன்பு செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளது. பலமுறை கடலாடி தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. லேசான மழை பெய்தால் கூட பள்ளிக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் சராசரியாக ஒருவார காலம் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் தொடர்ந்து அவதிப்படும் நிலை உள்ளது. தண்ணீர் தேங்கி கிடப்பதால் சுவர்கள் இடிந்து விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு தொற்று நோய்களும் பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைக்கு அழையும் நிலை உள்ளது. எனவே எம்.கரிசல்குளம் கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை முறையாக அளவீடு செய்து, அப்புறபடுத்த வேண்டும். புதியதாக மழைநீர் கால்வாயுடன் சாலை அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : government school classroom. , Government School
× RELATED பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்தது