×

தேவேந்திர குல வேளாளர் அரசாணை விவகாரம்: உன்னங்குளத்தில் ஒருவர் கூட ஓட்டுப் போடவில்லை

நெல்லை: தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பதாக சூடமேற்றி சபதம் செய்த உன்னங்குளம் கிராம மக்கள் ஒருவர் கூட நேற்று ஓட்டுப் போடவில்லை. இதனால் அந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளான பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், வாதிரியார், கடையர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டுமென்று பருத்திக்கோட்டை நாட்டார் சமுதாயத்தினர் நாங்குநேரி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

இந்த இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த 113 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர்.   இதில் பல கிராம மக்கள் நேற்று நடந்த நாங்குநேரி இடைத்தேர்தலை புறக்கணித்தனர். குறிப்பாக நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட  பெருமாள்நகர் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு என அறிவித்து கறுப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. அங்குள்ள இளைஞர்களும் கறுப்புக் கொடியை கையில் ஏந்திக் கொண்டு தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். பெருமாள்நகர் பகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள்  மூலக்கரைப்பட்டி அரசு  மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. ஆனால் பெருமாள் நகர் பகுதி மக்கள் யாரும் நேற்று காலை முதல் வாக்களிக்க செல்லவில்லை.

இதே போல அப்பகுதியைச் சேர்ந்த கல்லூத்து, கடம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த மக்களும் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் இந்த பகுதி மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூத் எண்.220ல் காலை 9 மணிக்கு வெறும் 30 வாக்குகள் மட்டுமே பதிவானது. காலை 11 மணி நிலவரப்படி 98 வாக்குகள் மட்டுமே பதிவானது. இந்த வாக்குகள் அந்த பகுதியைச் சேர்ந்த பிற வாக்காளர்கள் பதிவு செய்த வாக்குகளாகும். நேற்று மாலை வரை பெருமாள் நகர் பகுதி மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை. இதுகுறித்து பருத்திக்கோட்டை நாட்டார்கள் சங்கத்தின் சார்பில் பெருமாள் நகர் பாண்டி என்பவர் கூறுகையில், ‘எங்களது 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட   வேண்டும். அதை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.

இதேபோல் உண்ணங்குளம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்யப் போவதாக சூடமேற்றி சபதம் செய்து அறிவித்தனர். உன்னங்குளம் பஞ். யூனியன் துவக்கப் பள்ளி வாக்குச்சாவடி பூத் எண்.208ல் உன்னங்குளம், உன்னங்குளம் நாடார்குடி, குசவன்குளம், பிள்ளைகுளம் ஆகிய பகுதி மக்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1001 மொத்த வாக்காளர்களை கொண்ட இந்த வாக்குச்சாவடியில் காலை 9 மணி நிலவரப்படி 32 வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 200 வாக்குகளும் மட்டுமே பதிவானது. மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 325 ஓட்டுகள் மட்டுமே பதிவானது. அதாவது 32 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவானது. தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த உன்னங்குளம் கிராமத்தில் 570 ஓட்டுகள் இருந்தும், ேநற்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் வரை ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. இதன் மூலம் இந்த கிராம மக்கள் முழுவதும் தேர்தலை புறக்கணித்து தங்களது சபதத்தை நிறைவேற்றினர். இதனால் உன்னங்குளம் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. கிராம மக்களும் தேர்தல் என்ற வாடையே இன்றி அவரவர் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தனர். வெளியூர் மக்கள் ஒரு சிலர் மட்டுமே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த வண்ணம் இருந்தனர்.

வெறிச்சோடிய பூத்கள்

தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை வலியுறுத்தி 113 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்ததையடுத்து பல கிராமங்களில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் வெறிச்சோடின. உன்னங்குளம், பெருமாள்நகரைப் போல் ஆயர்குளம், கடம்பன்குளம், எடுப்பல், கிராமங்களிலும் ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை. நெல்லையப்பபுரம் கிராமத்தில் 20 ஓட்டுகளும், கல்லத்தியில் 11 ஓட்டுகளும், இளையார்குளத்தில் 4 ஓட்டுகளும், செல்வின்நகர் 13, பருத்திப்பாடு 34, நெல்லை நகர் 1, சின்னமூலக்கரை 6, ரெட்டியார்பட்டியில் ஒரு பூத்தில் 200 ஓட்டுகளுமே பதிவாகின.

Tags : Devendra , Election boycott
× RELATED பாஜகவில் இணைந்தார் அசோக் சவான்