குழித்துறையில் 140.2 மி.மீ பதிவானது... குமரியில் விடிய விடிய கொட்டிய கனமழை

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் நேற்று விடிய விடிய கனமழை ெகாட்டித்தீர்த்தது. கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு, சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் அது கனமழையாக மாறியுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் தொடங்கிய மழை இரவில் சற்று ஓய்ந்தது. பின்னர் அதிகாலை 3 மணியளவில் மீண்டும் பெய்ய தொடங்கியது. காலை சுமார் 8.30 மணி வரை தொடர்ந்து பெய்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைந்தது. பகல் வேளையில் லேசாக வெயிலடித்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. கால்வாய்கள் அடைப்பு, வடிகால்கள் சேதம் போன்றவற்றால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தொடருகிறது.
குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு மட்டுமின்றி, பன்றிவாய்க்கால் போன்ற சிறு சிறு கால்வாய்களிலும் தண்ணீர் கரைபுரண்டோடுகிறது. இதனால் அருகே உள்ள விளைநிலங்கள், கால்வாய்களில் தண்ணீர் புகுந்து வருகிறது. நாகர்கோவிலில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் மேலச்சங்கரன்குழி பகுதியில் கால்வாயை கடந்து பாயும் தண்ணீரால் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதனால் இரு சக்கர வாகனங்கள், கார்கள் செல்வது பாதிக்கப்பட்டது. இதனை போன்று மேலச்சங்கரன்குழி சந்திப்பில் இருந்து வில்லுக்குறி செல்லும் சாலையிலும் தண்ணீர் தேங்கியது. அந்த சாலையிலும் காலையில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ராஜாக்கமங்கலம் பகுதி வழியாக நாகர்கோவிலுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

புத்தேரி குளத்தில் மழையால் தண்ணீர் நிரம்பி, அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குளத்தின் கரையை பொக்லைன் இயந்திரத்தால் உடைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியில்  பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் கோர்ட் ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பு, அசம்பு ரோடு, கே.பி ரோடு, வெட்டூர்ணிமடம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியது. இதில் பல இடங்களிலும் சாலைகள் உடைந்து ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

நாகர்கோவில் கோட்டார், ராமர் காலனி பகுதியில் பாயும் பறக்கின்கால் ஓடையில் தண்ணீர் கரைபுரண்டு பாய்ந்ததால் அந்த பகுதியில் உள்ள வீடுளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் அடுத்துள்ள பிற வீடுகளிலும் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் கூறிய நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அந்த பகுதிகளை நேற்று காலையில் பார்வையிட்டார். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை போன்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களில், வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. தொடர் மழையை தொடர்ந்து மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 31.20 அடியாக இருந்தது. அணைக்கு 357 கன அடியாக தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 69.85 அடியாக இருந்தது. அணைக்கு 292 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக குழித்துறையில் 140.2 மி,மீ மழை பதிவாகி இருந்தது.

மலையோர பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தலா 18 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சிற்றார்-1 மற்றும் சிற்றார் 2 அணைகளில் நிர்மட்டம் உயர்ந்து, நேற்று காலை நிலவரப்படி 15 அடியை கடந்திருந்தது. தொடர்ந்து அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம் எந்நேரமும் 16 அடியை எட்டும் நிலை காணப்பட்டது. 16 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தவுடன் சிற்றார்-1 அணையில் இருந்து மறுகால் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோன்று முக்கடல் அணை நீர்மட்டம் 24 அடியாக உயர்ந்தது. பெருஞ்சாணி அணையிலும் நீர்மட்டம் 70 அடியை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடதக்கது. அணை நீர்மட்டம் 72 அடியானால் குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : pit , Heavy rain
× RELATED வாழப்பாடி அருகே பரிதாபம் போதையில் கிணற்றில் விழுந்து 2 பேர் பலி