×

பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டதால் மரத்தின் நிழலில் பஸ்சுக்காக காத்திருக்கும் கிராம மக்கள்

அம்பை: கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி விலக்கில் பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டதால், மரத்தின் நிழலில் பஸ்சுக்காக கிராம மக்களும், மாணவர்களுக்கும் காத்திருக்கும் அவலம் காணப்படுகிறது. கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை - பொட்டல் சாலையில் மூலச்சி விலக்கில் அமைந்திருந்த பயணிகள் நிழற்குடை மூலம் பொட்டல், மலையான்குளம், பாடாபுரம், அழகப்பபுரம், மாதுடையார்குளம், செங்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடைந்து வந்தனர். இப்பகுதியில் வசித்து வரும் அரசு மற்றும் தனியார்  நிறுவன ஊழியர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நெல்லை, அம்பை, கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர இந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் வலுவிழந்து காணப்பட்ட இந்த பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை மற்றும் சிலாப்புகளில் விரிசல் விழுந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிந்தன. சிமென்ட் காரைகள் பெயர்ந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்தது. இதனால் கிராம மக்கள், உயிர் பயத்தில் நிழற்குடையை வெளியேயே காத்திருக்கும் அவலம் காணப்பட்டது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடந்த 2018 நவ.26ம் தேதி தினகரனில் செய்தி வெளியானது.
இதையடுத்து நவ.28ம் தேதி ஆபத்தான நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இன்று வரை இந்த இடத்தில் புதிய நிழற்குடை அமைக்கப்படாததால், வழக்கம்போல வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தபடியும் கிராம மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதுகறித்து திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் குமார் என்ற சீவலமுத்து கூறுகையில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பயணிகள் நிழற்குடை அதிகாரிகளின் அலட்சியத்தால் முறையான பராமரிப்பின்றி இடிந்து விழுந்து நிலையில் இருந்தது. தினகரன் செய்தி வெளியானதையடுத்தே இடித்து அகற்றப்பட்டது.

ஆனால் இதுவரை புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டதால், மூலச்சி விலக்கில் உள்ள மரங்களின் நிழலிலும், மின்கம்பம் பகுதியிலும் பஸ்சுக்காக மக்கள் காத்திருக்கும் அவலம் காணப்படுகிறது. எனவே இந்த இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடையை விரைந்து கட்டித்தர மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கிராம மக்களை ஒன்று திரட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றனர்.

Tags : The villagers
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்