×

தமிழக - கேரள எல்லையான அட்டப்பாடி மலைச்சரிவில் ரூ.15 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் தீயிட்டு அழிப்பு!

கோவை: மேட்டுப்பாளையத்தில் பலகோடி மதிப்புள்ள கஞ்சா செடிகளை போதை தடுப்பு அதிகாரிகள்  தீயிட்டு கொளுத்தினர். தமிழகம் மற்றும் கேரளா மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ள அட்டப்பாடி வனப்பகுதிகள், அதாவது நீலகிரியின் மலைச்சரிவு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக மத்திய போதை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக, இந்த மலைப்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார் பல்வேறு பகுதிகளில் கஞ்சா செடி வளர்ப்பை தடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2 தினங்களாக அட்டப்பாடி பகுதியில் உள்ள மல்லீஸ்வரன் மலைப்பகுதி மற்றும் சைலன்ட் வேலி பகுதியில் மத்திய போதை தடுப்புப்பிரிவு போலீசாரும், கேரளாவின் வனத்துறையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து, மல்லீஸ்வரம் மலைப்பகுதியில் சுமார் ரூ.15 கோடி மதிப்பில் கஞ்சா செடிகளானது சமூக விரோதிகளால் பயிர்ப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், அந்த செடிகளை வேரோடு பிடிங்கி தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து, அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில், அதிக அளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்படுவது சத்தீஸ்கர் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் தான். ஏனெனில் கஞ்சா செடிகள் வளர்ப்பதற்கான மண்வளம் அங்கு அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரளாவின் அட்டப்பாடி பகுதிகளில் தான் இந்த செடிகள் பயிரிடப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செடிகளை யார் பயிரிட்டது என்பது குறித்து எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இது தொடர்பாக மத்திய போதை தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : cannabis plants , Mettupalayam, Attapadi, Nilgiris, Ganja plants, Destruction, Drug Police
× RELATED 3 கஞ்சா செடிகளை வீட்டிலே வளர்க்கலாம்:...