×

விஜய் ஹசாரே: அரை இறுதியில் தமிழகம்

பெங்களூர்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் அரை இறுதியில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றது. இந்த தொடரின் 3வது காலிறுதியில்  தமிழகம் - பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. ஆலூரில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தமிழக வீரர்கள் அபினவ் 17, முரளி விஜய் 22, விஜய் சங்கர் 13, தினேஷ் கார்த்திக் 11, ஷாருக்கான் 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் விளையாடிய பாபா அபராஜித் 56 ரன் விளாசினார். நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர் முடிவில் தமிழகம் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்தது.  

மீண்டும் மழை பெய்ததால் பஞ்சாப் அணி 39 ஓவரில் 195 ரன் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பஞ்சாப் 12.2 ஓவரில் 52 ரன் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னரும் மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து லீக் சுற்றில் பஞ்சாப் அணியை விட  தமிழகம் அதிக வெற்றிகளை குவித்ததன் அடிப்படையில் அரை இறுதிக்கு தேர்வானது.

சத்தீஸ்கர் முன்னேற்றம்
மும்பை - சத்தீஸ்கர் அணிகள் மோதிய 4வது கால் இறுதியில், டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. சத்தீஸ்கர் 45.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.  கேப்டன் ஹர்பிரீத் சிங் அதிகபட்சமாக 83 ரன் எடுத்தார்.  அமன்தீப் 59 ரன், லவின் கோஸ்டர் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு 40 ஓவரில் 192 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மும்பை 11.3 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 95 ரன் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 60 ரன் (38 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), ஆதித்ய தாரே 31 ரன்னுடன் களத்தில்  இருந்தனர்.  மழை நிற்காததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, லீக் சுற்றில் மும்பையை விட  அதிக வெற்றிகள் பெற்றிருந்ததன் அடிப்படையில் சத்தீஸ்கர் அரையிறுதிக்குள் நுழைந்தது. நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில்   கர்நாடகா-சத்தீஸ்கர் அணிகளும், 2வது அரையிறுதியில் குஜராத்-தமிழ்நாடு அணிகளும் மோதுகின்றன.


Tags : Vijay Hazare ,end. ,Tamils , Vijay Hazare, Tamilagam
× RELATED தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்