×

பூத் பணம் பங்கிடுவதில் பிரச்னை அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக - பாமகவினர் மோதல்

* நிர்வாகிகள் சட்டையை கிழித்தனர் * விக்கிரவாண்டி தொகுதியில் பதற்றம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் பூத் பணம் பங்கிட்டுக்கொள்வதில் அதிமுக கூட்டணியை சேர்ந்த தேமுதிக, பாமகவினரிடையே மோதல் ஏற்பட்டது.விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இதில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, பாமகவினர் பூத்களில் தேர்தல் பணியாற்றினார்கள். இவர்களுக்கு ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் ஏற்கனவே உரிய  தொகை வழங்கப்பட்டதாம். இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவின்போதும் ஆளுங்கட்சி தரப்பில் பணம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பங்கிட்டுக்கொள்வதில் கூட்டணி கட்சிகளுக்கிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. கல்யாணம்பூண்டி கிராமத்தில் நேற்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. இதனிடையே  மதிய உணவின்போது பூத் பணம் பங்கீட்டின்போது தேமுதிக, பாமகவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதிமுக அமைச்சரின்  உதவியாளர் ஒருவர் அங்கு வந்து பூத்துக்கு பணம் கொடுத்துச் சென்றாராம். அதனை பிரித்துக்கொள்வதில் இரு கட்சிகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. பாமகவினர் நாங்கள்தான் அதிகமாக உழைத்தோம், அதிகளவு பணம் எங்களுக்குதான  வேண்டும் என்று கூறியுள்ளனர், அதற்கு தேமுதிகவினர் சமமாக பிரிக்க வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இருகட்சியினரும்  சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் தேமுதிக, பாமகவினர் சட்டை கிழிந்த நிலையில், போலீசார் வந்து இரு கட்சியினரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.

இடைத்தேர்தலை புறக்கணித்த 113 கிராம மக்கள் ஒரு ஓட்டுக்கூட பதிவாகாத வாக்குச்சாவடிகள்
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளான பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தான், வாதிரியார், கடையர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட கோரி  பருத்திக்கோட்டை நாட்டார் சமுதாயத்தினர் நாங்குநேரி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர். இந்த இடைத்தேர்தலில் நாங்குநேரி தொகுதியைச் சேர்ந்த 113 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர்.    இதில் பல கிராம மக்கள் நேற்று நடந்த நாங்குநேரி இடைத்தேர்தலை புறக்கணித்தனர். குறிப்பாக பெருமாள்நகர் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு என அறிவித்து கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது. இங்குள்ள வாக்காளர்கள்  மூலக்கரைப்பட்டி அரசு   மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. ஆனால் பெருமாள் நகர் பகுதி மக்கள் யாரும் வாக்களிக்க செல்லவில்லை.

இதே போல அப்பகுதியைச் சேர்ந்த கல்லூத்து, கடம்பன்குளம் பகுதியைச் சேர்ந்த மக்களும் தேர்தலை புறக்கணித்தனர். இதேபோல் உண்ணங்குளம் கிராம மக்கள், பஞ். யூனியன் துவக்கப் பள்ளி வாக்குச்சாவடி பூத் எண்.208ல் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1001 வாக்காளர்களை கொண்ட இந்த வாக்குச்சாவடியில் 324 ஓட்டுகள் மட்டுமே பதிவானது.  உன்னங்குளம் கிராமத்தில் 570 ஓட்டுகள் இருந்தும், ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. இதைப்போல் ஆயர்குலம் , பெருமாள்நகர், கடம்பன்குளம் உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகளில் ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை.இதன் மூலம் இந்த கிராம மக்கள் முழுவதும் தேர்தலை புறக்கணித்து தங்களது சபதத்தை நிறைவேற்றினர்.

அதிமுக எம்பியை எதிர்த்துதிமுகவினர் மறியல்
அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நுழைந்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கு திரண்ட திமுக, காங்கிரஸ் கூட்டணி  கட்சியினர் விஜிலா சத்யானந்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மறியல் செய்தனர். அதிமுகவினரும் அங்கு திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் கலைந்து போகச் செய்தனர். விஜிலா  சத்யானந்தும்  வெளியேறி சென்றார்.

Tags : Temuthika-Bamakavinar ,AIADMK ,clash ,alliance , Problem ,Booth money, sharing Temuthika-Bamakavinar ,AIADMK
× RELATED நீட் விவகாரம் குறித்து...