×

தடை செய்த கார்டுகள் மூலம் டெங்கு சோதனை ரத்த பரிசோதனை நிலையத்துக்கு சீல் வைப்பு: 10 ஆயிரம் அபராதம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கார்டுகள் மூலம் டெங்கு ரத்த பரிசோதனை செய்த நிலையத்துக்கு சீல் வைத்து ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெருவில் உள்ள ரத்த பரிசோதனை நிலையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட டெங்கு இருப்பதை சோதனை செய்யும் போலி கார்டு வைத்து  ஆய்வு செய்யப்படுகிறது என நகராட்சி  நகர்நல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகர்நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் சாமிநாதன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் அந்த பரிசோதனை நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போலியான டெங்கு கண்டுபிடிக்கும் கார்டை வைத்து நோயாளிகளின் ரத்தங்களை பரசோதனை செய்து டெங்கு காய்ச்சல் உள்ளது என்று ஏராளமானோருக்கு சான்றிதழ் வழங்கியது தெரியவந்தது.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் உடனடியாக போலி டெங்கு கண்டுபிடிக்கும் கார்டை பறிமுதல் செய்தனர். மேலும் ரத்த பரிசோதனை நிலையத்துக்கு சீல் வைத்து ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இங்கு பரிசோதனை செய்ய  பரிந்துரைத்த கும்பகோணத்தில உள்ள பல்வேறு டாக்டர்களின் கிளினிக்கையும் ஆய்வு செய்யவுள்ளனர்.இதுகுறித்து நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில், இதுபோன்று தடை ெசய்யப்பட்ட கார்டால் பரிசோதனை நடந்தால் ரத்த பரிசோதனை நிலையத்துக்கு சீல் வைத்து உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.

ஈரோட்டில் சினிமா தியேட்டருக்கு சீல் வைப்பு; 2 லட்சம் அபராதம்
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் மூடப்பட்ட நிலையில் இருந்த தியேட்டரில் கலெக்டர் கதிரவன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது  மூடிக்கிடந்த தியேட்டரில் பல இடங்களில் டெங்கு கொசுப்புழுக்கள் அதிகளவில் இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி நகர்நல அலுவலர் சுமதியை கண்டித்த கலெக்டர்,  வேலை பார்க்க விருப்பமில்லையென்றால் நீங்களே சென்று விடுங்கள்.  இல்லையென்றால் உங்கள் இடத்திற்கு வேறு ஒருவர்தான் பணியில் இருப்பார் என்றார். பின்னர் ஆணையாளர் இளங்கோவனிடம் இவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றார். தொடர்ந்து தியேட்டரின் மின்  இணைப்புகளையும், குடிநீர் இணைப்புகளையும் துண்டிக்கவும் ₹2 லட்சம் அபராதம் விதித்து, தியேட்டருக்கு சீல் வைக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.



Tags : Sealing ,dengue testing center ,deposit blood test , Dengue, banned cards,blood test,fine
× RELATED திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி...