×

ஆப்பிரிக்கா, துபாய், பிரிட்டிஷ் தீவுகளில் 100 கோடி முதலீடு கல்கி ஆசிரமங்களில் நடந்த ரெய்டில் 800 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

* 4 ஆயிரம் ஏக்கர் நிலம் முறைகேடாக வாங்கியது அம்பலம்
*  விசாரணைக்கு ஒத்துழைக்காத மகன், மருமகள்
* 100 கோடி மதிப்பு தங்கம், வைரம், பணம் பறிமுதல்

சென்னை: கல்கி ஆசிரமங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் நடந்த சோதனையில் 800 கோடி வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கல்கி ஆசிரமம் இயங்கி வருகிறது. ஆசிரமம் அமைப்பதற்கு முன்பு விஜயகுமார் சாதாரண எல்ஐசி ஏஜென்டாக பணியாற்றி வந்தார். பின்னர், கடந்த 1989ம் ஆண்டு, `நான்  விஷ்ணுவின் அவதாரம். என் பெயர் கல்கி பகவான்’ என தனக்குத்தானே பறை சாற்றிக் கொண்டார். பின்பு, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் சிறிய அளவில் கல்கி ஆசிரமத்தை தொடங்கினார். இந்த ஆசிரமத்துக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எனப் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மக்கள் குவிந்தனர். விஜயகுமார் குறுகிய காலத்தில் உலகளவில் பிரபலமடைந்தார். வசதி வந்த உடன் ஆந்திர மாநிலம்  வரதய்யாபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமத்தை நிறுவினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை தொடங்கி நடத்தி வருகிறார்.அதன் பிறகு தான் ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் மிக பிரமாண்டமாக கல்கி ஆசிரமம் கட்டி தற்போது பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்து வருகிறார். கல்கி பகவானின் மாய வித்தையால் குறுகிய காலத்தில் பல ஆயிரம்  வெளிநாட்டு பக்தர்களை தன் வயப்படுத்தினார். அவர்களும் கோடிக்கணக்கில் நிதி வழங்கி வருகின்றனர். பல வெளிநாட்டு பெண் பக்தர்கள் ஆசிரமத்திலேயே தங்கி கல்கி பகவானுக்கு சேவை செய்து வருகின்றனர்.

ஆசிரமத்தில் தங்கி இருந்த பல வெளிநாட்டு பெண் பக்தர்கள் மாயமாகி உள்ளனர். இந்நிலையில் கல்கி ஆசிரமத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக நன்கொடை என்ற பெயரில் பணம் வருவதாக கூறப்படுகிறது.  அதேநேரம் அந்த பணத்தை வெளிநாட்டு பக்தர்கள் பெயர்களில் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர சுவிஸ் வங்கியில் கல்கி ஆசிரம  நிர்வாகிகள் பெயர்களில் பல ஆயிரம் கோடி பணம் டெபாசிட் செய்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என நாடு முழுவதும் உள்ள கல்கி ஆசிரமங்கள் மற்றும் கல்கி பகவான் மகன் கிருஷ்ணா நடத்தி வரும் தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் அலுவலகங்கள்  என நாடு முழுவதும் 40 இடங்களில் கடந்த 16ம் தேதி முதல் 500க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனை நடத்தினர். 40 இடங்களிலும் இரவு பகலாக தொடர்ந்து நடந்து வந்த 5 நாள்  சோதனை நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதில் கல்கி ஆசிரமங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கல்கி ஆசிரமங்களில் கணக்கில் வராத கட்டுக்கட்டாக 45 கோடி பணம் மற்றும் 20 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் 90 கிலோ தங்கம் ,வைர நகைகள் என மொத்தம் 100 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் ஆபரணங்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. மேலும், ஆந்திரா மாநிலம் வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் கட்ட மோசடியாக வாங்கப்பட்ட நிலம் என கல்கி ஆசிரமங்களுக்கு சொந்தமான மொத்தம் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் இதுவரை வருமான வரித்துறையிடம் கணக்கு  காட்டப்படாமல் பதுக்கி வைத்திருந்த ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதுதவிர கல்கி ஆசிரமம் மற்றும் அவரது மகன் கிருஷ்ணா மற்றும் மருமகள் பிரீத்தா ஆகியோர் நடத்தும் நிறுவனங்கள் மூலம் ஆப்பிரிக்கா, துபாய், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 100க்கும் மேல் முதலீடுகள் செய்து இருப்பதற்கான  ஆவணங்கள் கல்கி பகவானின் ரகசிய அறையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.இதுதவிர 5 நாட்களில் 40 இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தமாக ஒரு இடத்தில் வைத்து அதிகாரிகள் கணக்காய்வு செய்தனர். அப்போது, கல்கி ஆசிரமங்கள் சார்பில் இதுவரை மத்திய  அரசுக்கு ₹800 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கணக்கில் வராத பணத்தை பினாமிகள் பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதும் மற்றும் முதலீடுகள் செய்து இருப்பதும்  தெரியவந்துள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு பணம் குறித்து கல்கி பகவான் மகன் கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணாவின் மனைவி பிரீத்தாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரடியாக  விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் அதிகாரிகள் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் மவுனமாக இருந்ததாகவும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடவும் இருவரும் மறுத்துவிட்டதாகவும் வருமான வரித்துறை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேமம் ஆசிரமத்தில் கல்கி சாமியார்
கல்கி ஆசிரம சிஇஓ சுனில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கல்கி சாமியார் எங்கும் செல்லவில்லை. திருவள்ளூர் மாவட்டம் நேமம் ஆசிரமத்தில்தான் இருக்கிறார். ஆரோக்கிய பிரச்னை காரணமாக வெளியே வராமலிருந்தார். விரைவில்   பக்தர்களுக்கு தரிசனம் தருவார். வழக்கம்போல் ஆசிரமத்தில் வெளிநாட்டு பக்தர்களும் உள்நாட்டு பக்தர்களும் வந்து தியான  பணியை செய்து வருகின்றனர்’’ என்றார்.



Tags : Dubai ,Africa ,British Isles , 100 crore ,investment Africa, Dubai ,British Isles,discovery
× RELATED ரச்சின் 46, ருதுராஜ் 46, துபே 51 சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி