×

போதிய அளவு பயணிகள் இல்லாததால் ஒரேநாளில் 4 விமானங்கள் ரத்து: முன்பதிவு செய்தவர்கள் தவிப்பு

சென்னை: போதிய அளவு பயணிகள் இல்லாத காரணத்தால் நேற்று ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் டெல்லி, பெங்களூரு ஏர் இண்டியா நிறுவனத்தின் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். டெல்லியில் நேற்று காலை 6.10 மணிக்கு புறப்பட்டு 8.55  மணிக்கு சென்னை வந்து சேரவேண்டிய ஏர் இண்டியா விமானம் அதைப்போல் கலை 9.55க்கு சென்னையில் புறப்பட்டு பகல் 12.50 மணிக்கு டெல்லி போய் சேரவேண்டிய ஏர் இண்டியா விமானம் பெங்களூரில் இருந்து பகல் 11.20க்கு புறப்பட்டு  பகல் 12.20க்கு சென்னை வந்து சேரவேண்டிய ஏர் இண்டியா விமானம் சென்னையில் இருந்து பகல் 1.25க்கு புறப்பட்டு பகல் 2.25 மணிக்கு பெங்களூரு போய் சேர வேண்டிய ஏர் விமானம் ஆகிய 4 விமான சேவைகள் நேற்று ஒரே நாளில் ரத்து  செய்யப்பட்டன. இந்த ரத்துக்கு என்ன காரணம் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகளை கேட்டபோது இதில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த விமானங்களில் பயணம்  செய்ய முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு முறைப்படி அறிவிப்புக் கொடுத்து அவர்களை மாற்று விமானங்களில் பயணிக்க செய்துள்ளோம்.

காலை. 8.55க்கு டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய பயணிகள் பகல் 12.40 மணிக்கு சென்னை வந்த ஏர்இண்டியா விமானத்தில் காலை 9.55 மணி விமானத்தில் டெல்லி செல்ல வேண்டிய பயணிகள் முன்னதாகவே காலை 8.45 மணிக்கு  சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் ஏர் இண்டியா விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். அதைப்போல் பகல் 12.20 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வரும் பயணிகள் முன்னதாகவே காலை 9.20 மணிக்கு  பெங்களூரு வந்த விமானத்திலும் அதேபோல், சென்னையில் இருந்து பெங்களூருக்கு பிற்பகல் 1.25 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்திலும் அனுப்பி  வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பயணிகள் தரப்பிலோ ஏர் இண்டியா விமான நிறுவனத்தில் சமீபகாலமாக போதிய பயணிகள் இல்லை என்று தொடர்ச்சியாக விமானங்களை ரத்து செய்கின்றனர். அதோடு மட்டுமின்றி பிற்பகல் 1.25 மணிக்கு பெங்களூரு விமானத்தில்  முன்பதிவு செய்த பயணிகளுக்கு திடீரென விமானம் காலை 7 மணிக்கு புறப்படும் அதனால் 5.30 மணிக்கு விமான நிலையம் வரவேண்டும் என்று நேற்று முன்தினம் இரவு பயணிக்கு தகவல் அனுப்புகின்றனர். இது பயணிகளுக்கு பெரும்  குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

மேலும் தனியார் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டாலும் இதைபோல் போதிய பயணிகள் இல்லை என்று பெரிய அளவில் ரத்து செய்யப்படுவது கிடையாது. ஆனல் பொதுத்துறை நிறுவனமான ஏர் இண்டியா சமீபகாலமாக இதைபோல்  பயணிகள் இல்லை என்று விமான சேவையை ரத்து செய்து விமான போக்குவரத்து சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. இதற்கு இந்த விமான நிறுவனத்தின் மீது டிஜிசிஏ டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோல் ஒரேநாளில் 4 விமானம் ரத்தாகி பயணிகள் இடையே பெரும்  குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : flights ,passengers , Due , adequate, passengers, 4 flights canceled
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...