×

பா.ஜ வேட்பாளரை கிண்டலடித்த ராகுல்: மிகவும் நேர்மையான மனிதர்’ என டிவிட்டரில் ‘பாராட்டு’

புதுடெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜ.வுக்கே ஓட்டு விழ வேண்டும் என்று கூறிய பாஜ வேட்பாளரை `மிகவும் நேர்மையான மனிதர்’ என ராகுல் காந்தி டிவிட்டரில் கிண்டலடித்துள்ளார். அரியானாவில் நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி நேற்றைய தனது டிவிட்டரில், ஞாயிற்றுக்கிழமை வெளியான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், பாஜ.வின் மிகவும் நேர்மையான மனிதர்’ என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், கர்னால் மாவட்டத்தில் உள்ள ஆசாந்த் தொகுதியின் பாஜ எம்எல்ஏ. பக்‌ஷிஷ் சிங் வீர், தனது ஆதரவாளர்களிடம், `மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜ.வுக்கே ஓட்டு விழ வேண்டும். யார் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பது நமக்கு தெரிய வரும். இதில் எந்த தவறுக்கும் இடமில்லை’ என கூறியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அத்தொகுதி வாக்குப்பதிவை கண்காணிக்க சிறப்பு தேர்தல் அதிகாரியை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், `இந்த வீடியோ போலியானது, தனக்கும் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி’ என்று எம்எல்ஏ மறுப்பு தெரிவித்தார்.


Tags : candidate ,BJP ,Rahul , Electronic Voting, BJP, Rahul Gandhi
× RELATED திண்டிவனம் அருகே பெண்ணை மறுமணம்...