×

மாநில சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிராவில் 55 சதவீதம் அரியானாவில் 65% வாக்குப்பதிவு

மும்பை: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் 47.34 சதவீதம் வாக்குகள் பதிவானது. இதேபோல் அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானது. இரு மாநிலங்களிலும் பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் தற்போதைய பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் 9ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த செப்டம்பர் 21ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பத்தில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும் நேரம் செல்லச் செல்ல வாக்குப்பதிவில் விறுவிறுப்பு ஏற்பட்டது. மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்த போதிலும் வாக்காளர்கள் அதையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

ரத்னகிரி மற்றும் பண்டாரா மாவட்டங்களில், பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மும்பை, ஒர்லி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலும் இந்த கோளாறு ஏற்பட்டது. இந்த தேர்தலில் வாக்களித்த முக்கிய பிரமுகர்களில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிரா நவ நிர்மாண் ேசனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரும் அடங்குவர். அமீர் கான், மாதுரி தீக்‌ஷித், லாரா தத்தா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த தேர்தலில் வாக்களித்தனர். 93 வயதான முன்னாள் ராணுவ வீரர் கன்னா சஹாப் என்பவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானியுடன் வந்து மும்பையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

பாஜ-சிவசேனா கூட்டணி ஒரு அணியாகவும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும் இந்த தேர்தலை சந்தித்தன. இது தவிர ராஜ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் ேசனா, பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி, ஓவைசியின் ‘ஏஐஎம்ஐஎம்’ கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தல் களத்தில் மோதின. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், 1.83 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இதில், 85 லட்சம் பேர் பெண்கள். 1,169 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 105 பேர் பெண்களாவர். இம்மாநிலத்தில் 2வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜவும், மீண்டும் அரியானாவை கைப்பற்ற காங்கிரசும் போட்டி போட்டன. இதுதவிர, துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன.

மொத்தம் 19,578 வாக்குச்சாவடி மையங்களில் 75 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நூ மாவட்டத்தில் மட்டும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் அடிதடி சம்பவங்கள் நடந்தன. இதில் பெண் ஒருவர் காயமடைந்தார். மற்றபடி வாக்குபதிவு அமைதியாக நடந்து முடிந்தது. குறிப்பாக, அதிகளவில் பெண்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்.மாநில முதல்வரான மனோகர் லால் கட்டார், சண்டிகரில் இருந்து ஜன் சதாப்தி ரயிலில் பயணம் செய்து, தனது சொந்த தொகுதியான கர்ணலுக்கு வந்தடைந்தார். ரயில் நிலையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டியபடி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘பாஜ நிர்ணயித்த இலக்குபடி 75 தொகுதிகளை நிச்சயம் வெல்லும்’’ என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த தேர்தலில் பாஜ 48 இடங்களில் வென்றது.

சிர்சா தொகுதியில், ஜேஜேபி கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா தனது மனைவி, தாயாருடன் டிராக்டரில் வந்து வாக்களித்தார். முன்னாள் முதல்வரான காங்கிரசின் பூபிந்தர் சிங் ஹூடா தனது குடும்பத்தினருடன் கர்கி சம்ப்லா தொகுதியில் வாக்களித்தார். மாலை 6 மணியுடன் வாக்குபதிவு நிறைவடைந்த நிலையில், 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல தமிழண்டி, நாங்குநேரி உட்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதியிலும், சதாரா (மகாராஷ்டிரா), சமஸ்திபூர் (பீகார்) ஆகிய 2 மக்களவை தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் வரும் 24ம் தேதி எண்ணப்படுகிறது.

இருமாநிலங்களிலும் பா.ஜ ஆட்சியை பிடிக்கிறது?
வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் மகாராஷ்டிரா, அரியானா இரு மாநிலத்திலும் பாஜ மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா- 288 தொகுதிகள்
        பாஜ+    காங்.+    மற்றவை
சிஎன்என்        243            41    4
டைம்ஸ் நவ்    230    48    10
இந்தியா டுடே    166-194    72-90    22-34
சராசரி        210    64    13

அரியானா - 90 தொகுதிகள்
        பாஜ+    காங்.+    மற்றவை
இந்தியா நியூஸ்    75-80            9-12    0-1
சிஎன்என்        75    10    5
டைம்ஸ் நவ்    71    11    8
சராசரி        68    13    10



Tags : Haryana ,Maharashtra , State Assembly Elections, Maharashtra, Haryana, Voting
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...