×

சுற்றுலா தலமாகிறது சியாச்சின் அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

லடாக்: ‘‘சியாச்சின் பனிமலைப் பகுதியை சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது’’ என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் லடாக் பகுதியில் சியாக் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது சீன எல்லையிலிருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ளது. துர்புக்  மற்றும் தவுலத் பெக் ஓல்டி பகுதிக்கு செல்லும் சாலையை இந்த பாலம் இணைக்கிறது. ஆசியாவிலேயே முதல் முறையாக மைக்ரோ பைல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த பாலம் கட்டப்பட்டது. இதற்கு காஷ்மீரின் லடாக் பகுதியைச் சேர்ந்த மறைந்த ராணுவ அதிகாரி கர்னல் செவாங் ரின்சின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத், லடாக் எம்.பி ஜம்யங் செரிங் நம்கயல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்த பாலத்தை 15 மாதங்களில் கட்டிய எல்லை சாலை அமைப்பினரை(பிஆர்ஓ) பாராட்டுகிறேன். தொலைதூர பகுதிகளிலும், சிக்கலான பகுதிகளிலும் ரோடு மற்றும் தொலைத் தொடர்பை மேம்படுத்துவதில் பிஆர்ஓ முன்னணி வகிக்கிறது. இந்தப் பகுதியை சுற்றுலாவுக்கு திறந்துவிடுவது பற்றி லடாக் எம்.பி. தனது உரையில் குறிப்பிட்டார். சியாச்சின் அடிவார முகாம் முதல் குமார் போஸ்ட் வரை சுற்றுலா பயணிகளுக்கு திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது வீரர்கள் மற்றும் பிஆர்ஓ இன்ஜினியர்கள் மற்றும் தொழிலாளர்களின் முயற்சிகளை சுற்றுலா பயணிகள் பாராட்ட இந்த நடவடிக்கை உதவும். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, லடாக் பகுதி இனி நண்பர்களை ஈர்க்கும். இங்கு எதிரிகளுக்கு இடமில்லை. தீவிரவாத நடவடிக்கைக்களை நமது அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரித்து வருகிறது. தீவிரவாத ஊடுருவலை பாகிஸ்தான் நிறுத்தவில்லை என்றால், நமது ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுக்கும்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Rajnath Singh ,Sioux , Rajnath Singh, Minister of Tourism, Siachen
× RELATED ரூ.39,125 கோடிக்கு ஏவுகணைகள் போர்விமானங்கள் வாங்குகிறது இந்தியா