×

நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார்: 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் விடுப்பு

நாங்குநேரி: நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து  வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி நிலவரப்படி, நாங்குநேரியில் 62.59 விழுக்காடு வாக்குகளும், விக்கரவாண்டியில், 76.41 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள்  நுழைய முயன்ற கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர். தேர்தல் முடியும் வரை மாலை 6 வரை காவல் நிலையத்தில் வைக்கப்படுவார்  என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். எம்.பி.வசந்தகுமார் மீது தேர்தல் அதிகாரி ஜான் கபிரியேல் அளித்த புகாரின் கீழ் 171எச், 130, 143 ஆகிய 3  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, எம்.பி.வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து  நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Tags : Vasanthakumar ,Nankuneri ,Congress ,constituency , Congress MP tried to enter Nankuneri constituency
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...