பேருந்து நிலையங்கள் சுத்தமாக வைத்திருப்பது குறித்த வழக்கு: ஒருவாரத்தில் பதில் அறிக்கை வருவாய் நிர்வாகத் துறை தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள், துறை சார்ந்தவர்களிடம் பதில் பெற்று ஒருவாரத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்வதாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பேருந்து நிலையங்கள் பராமரிக்கப்படுவதில்லை என்று பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவரது பொது நல மனுவில் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் சுகாதாரக் கேடுடன் இருக்கிறது. பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால்தான் இந்த சுகாதாரக் கேடு ஏற்படுகிறது என தெரிவித்திருந்தார். இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவு வாழ்வுரிமையை வழங்கியுள்ளது. அதில் சுகாதாரமான சூழ்நிலையை அனுபவிப்பதும் அடங்கும். மாநிலம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களை சுத்தமாகப் பராமரிக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு 2015-ல் மனு அளித்தும் எந்த பதிலும் வரவில்லை.

தெருக்களையும், பொது இடங்களையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகளை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து பதிலளிக்கும்படி தமிழக வருவாய்த்துறை, உள்துறை, போக்குவரத்துத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் டிஜிபிக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக வருவாய் நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதில் ஒவ்வொரு துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் நடவடிக்கை குறித்தும் விரிவான அறிக்கையை ஒரு வார காலத்திற்குள் அளிக்கும்படி வலியுறுத்தியதாக முதன்மைச் செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிக்கையைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Tags : Department Information. Cleaning Bus Stations ,Cleaning Bus Stations ,Weekly Response Report Revenue Administration , Bus Stations, Clean, Case, Weekly, Response Report, Revenue Administration Department, Information
× RELATED சிலை கடத்தல் தொடர்பு வழக்கு...