×

இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தம்: இந்தியா கண்டனம்

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சனிக்கிழமை இரவிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், உள்ளூர் வாசி ஒருவரும் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்த 3 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் கொல்லப்பட்டார்கள். ஜெய்ஷ் இமுகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்தார்.

ஆனால் இந்திய ராணுவத்தின் கூற்றுக்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தியாவுடன் தபால் சேவையை நிறுத்திக் கொள்வதாக இன்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது சர்வதேச தபால் சேவை மரபுகளுக்கு எதிரானது. எந்த ஒரு நோட்டீஸும் வழங்காமல் திடீரென தபால் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது என கூறினார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடனான உறவை துண்டிக்கும் வகையில் சில நடவடிக்கைகள் பாகிஸ்தான் மேற்கொண்டது. டெல்லியிலிருந்து தூதரை திரும்ப அழைக்கவும் தங்கள் நாட்டிலுள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் செய்தது. மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Pakistan ,India , India, Postal Service, Pakistan stop, India, condemnation
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!