சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்கள் விளைவாக, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள உயர் நீதிமன்ற கட்டிடத்திற்கு மட்டும் 2015 நவம்பர் 15-ல் தொடங்கிய பாதுகாப்பு ஒவ்வொரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி உடன் இந்தப் பாதுகாப்பு முடிகிறது. இந்நிலையில் இதனை நீட்டிப்பது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சரவணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் நீதிமன்ற பாதுகாப்பை ஒவ்வொரு ஆண்டாக நீட்டிப்பதற்கு பதிலாக நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும்.

சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு இல்லாத உயர் நீதிமன்ற வளாகத்தில் சில அசம்பாவிதங்கள், போராட்டங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. எனவே உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதில் தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டாக நீட்டிப்பதால் வீரர்களை இடமாற்றம் செய்வதில் மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் படிப்பு தொடர்பான விசயங்களும் பாதிக்கப்படும் என தெரிவித்தது. இறுதியில் இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சிஐஎஸ்.எஃப் பாதுகாப்பு கொடுக்கப்படும். சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து உயர்நீதிமன்ற பாதுகாப்பு குழு ஆராய்ந்து முடிவெடுக்கவும் அறிவுறுத்தி இந்த வழக்கை மூன்று மாதங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Related Stories:

>