×

தெ.ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது: ரோகித் ஷர்மா

ராஞ்சி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது என ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி, டெஸ்ட்டில் முதல் முறையாக தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இவர் அணிக்கு 212 ரன்கள் சேர்த்துள்ளார். அதேபோல அசத்தலாக விளையாடிய ரஹானே 115 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இரட்டை சதம் குறித்து ரோகித் ஷர்மா கூறுகையில்; இரட்டை சதம் அடித்தது மிகவும் சவாலாக இருந்தது. நான் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளேன். இன்னும் நிறையே போட்டிகள் விளையாட வேண்டும். அதனால் என்னுடைய தொடக்க ஆட்டம் குறித்து தற்போது எதுவும் பெரிதாக கூற முடியாது. எனினும் 5-ஆவது அல்லது 6-ஆவது இடத்தில் விளையாடுவதைவிட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது மிகவும் சவாலாக உள்ளது. இதனால் தான் தொடக்கத்தில் சற்று பொறுமையாக விளையாட ஆரம்பித்தேன்.

தொடக்க ஆட்டக்காரராக மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று தான் நினைத்தேன் என்றும் கூறியுள்ளார்.


Tags : Test ,South Africa ,Rohit Sharma ,Rohit Sharma. South Africa , Double century, challenge, Rohit Sharma
× RELATED மூன்று நாட்கள் அல்ல ஒரு வாரம்...