×

தூத்துக்குடியில் தொடரும் அவலம்: இரவில் கொட்டித்தீர்க்கும் மழையால் குளங்களாக மாறிவரும் சாலைகள்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரவில் கொட்டித் தீர்க்கும் மழையால் தார்சாலைகள் அனைத்தும் குளங்களாக மாறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் பரிதவிக்கும் அவலம் தொடர்கிறது. தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை துவங்கி பரவலாக பெய்து வருகிறது.  குறிப்பாக இரவு நேரங்களில் அதிக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம்  இரவு  துவங்கி காலை வரையில் தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியது. இதில்  தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியது. குறிப்பாக  தூத்துக்குடியில் போக்குவரத்து முக்கியதுவம் வாய்ந்த அனைத்து சாலைகளுமே   குளங்களாக மாறியுள்ளது.

தூத்துக்குடியில் தற்போது பழைய பஸ் நிலையம்  புதியதாக நிர்மானிக்கப்பட்டு வருவதால் தற்காலிக பழைய பஸ் நிலையம் எஸ்ஏவி  பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது தரைமட்டத்தில் இருந்து மிகவும்  தாழ்வான பகுதி என்பதால் நேற்று முன் தினம் பெய்த மழையில்  முற்றிலும்  மழைநீரால் குளமானது. பகுதியளவில் நெல் நடவு செய்ய தொழி அடித்த வயல்கள் போல  மாறி சகதியாக காட்சியளிக்கிறது. பயணிகள், மாணவ மாணவியர் பலர்  சேற்றில் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளனர். இதனை சீரமைக்ககோரி ஜனநாயக  வாலிபர் சங்கம் உள்ளிட்ட கட்சியினர் அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். மாநகராட்சி  சார்பில் முன்பு மழை வெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர்  உறிஞ்சி எடுக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்படும். ஆனால் தற்போது மழை  தொடர்வதால் பல சாலைகள் குளங்களாகவே மாறியுள்ளன. புதியதாக அமைக்கப்பட்ட  தாலுகா அலுவலகம் சுற்றிலும் உள்ள சாலைகளில்  நீர் நிறைந்துள்ளதால் தீவாக  மாறியுள்ளது.

மேலும் நகரில் பள்ளமான பல தெருக்களிலும், சாக்கடைகள்  கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளிலும்  மழை நீருடன் கழிவு நீரும்   தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உள்ளிட்ட நோய் பரப்பும் கிருமிகள் உருவாகி  சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இதனிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெருக்கெடுத்த தண்ணீர் பொங்கிவரும் புதுவெள்ளமாகவும், புதிய ஆறாகவும் ஓடியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகள், உள் நோயாளிகளை சந்திக்க வந்த உறவினர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட பலரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனிடையே தூத்துக்குடி கக்கன் பூங்கா பகுதியில் வாறுகால் அமைப்பு பணி ராட்சத பள்ளம் தோண்டியநிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் கிடப்பில்போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ராட்சத பள்ளங்களில் மழையால் பெருக்கெடுத்த தண்ணீரோடு அப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து தேங்கிநிற்பதால் சுகாதார கேடு நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதே போல் மாவட்டத்தில் பல்வேறு  பகுதிகளில் பெய்த பரவலான மழை காரணமாக வேம்பார் முதல் திருச்செந்தூர்  வரையிலான சுமார் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்களில்  பெரும்பாலானனைவை மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் உப்பள உரிமையாளர்கள்,  தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Roads ,Thoothukudi , Tuticorin
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...