×

சேலத்தில் 500 மீட்டர் தூரம் செல்லும் சிறிய ரக ராக்கெட்டை தயாரித்து அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்

சேலம்: அறிவிலும் திறமையிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் சேலத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானிகள். இவர்கள் 500 மீட்டர் தூரம் செல்லும் சிறிய ரக ராக்கெட்டை ஒன்றினை தயாரித்து அசத்தியுள்ளனர். பாடப்புத்தகங்கள் மட்டுமே ஒரு மாணவனை அறிவாளியாகிவிட முடியாது. தனித்திறமையும், அறிவாற்றலும் மட்டுமே அவர்களை சாதனையாளர்களாக உயர்த்துகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள தேவனுர் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் அறிவியல் மீதான ஆர்வத்தால் 500 மீட்டர் தூரம் செல்லும் சிறிய ரக ராக்கெட்டை தயாரித்து அசத்தியிருக்கிறார்கள்.

விண்ணை நோக்கி சீறி பாய்ந்த அந்த ராக்கெட் அப்பகுதி மக்களின் கைத்தட்டல்களுக்கும், பாராட்டல்களுக்கும் வித்திட்டது. பெரும்பாலும் அறிவியல் என்றாலே, மாணவர்களுக்கு அலர்ஜி தொற்றிக் கொள்ளும் நிலையில், ராக்கெட் தொழில்நுட்பத்தை ஆர்வத்தோடு கற்றுக் கொண்டு சொந்தமாக ராக்கெட் தயாரித்திருக்கின்றனர் இந்த அரசு பள்ளி மாணவர்கள். பெங்களூரு மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ மையங்களுக்கு அழைத்து சென்று ராக்கெட் செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு விவரித்ததே இந்த தயாரிப்புக்கு காரணம் என தேவனுர் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தினேஷ் தெரிவித்துள்ளார்.

அறிவியல் சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்த்து இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயா தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மாணவர்களுக்கு பாட புத்தகங்களை தாண்டி அவர்களிடம் உள்ள தனித்துவமான திறமைகளை வெளிக்கொண்டு வரும் தார்மீக பொறுப்பு ஆசிரியர்களையே சாரும். அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால் தமிழகம் இன்னும் பல கலாம்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Tags : government school ,Salem. ,Salem , Salem, 500 meters, small rocket, government school students
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...