×

தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது

தீவிரவாதிகளின் புகலிடமாக தமிழகம் திகழ்கிறது. சமீபத்தில் கூட தீவிரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் என பெரும்பாலானோரை தமிழகத்தில் தான் என்ஐஏ  புலனாய்வு அமைப்பினர் பிடித்துள்ளனர். பல குற்றவாளிகளை தமிழகத்தில் தான் பிடிக்கின்றனர். இந்தியாவில் தீவிரவாதிகள் புகலிடம் தமிழகம் தான் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. குற்றங்கள் புரிவதற்கு நிர்வாக கோளாறு தான் காரணம். சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமான நிலையில் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காவல்துறையை கவனித்த போது, இருந்த அளவுக்கு கூட இப்போது சட்டம் ஒழுங்கு நிலை இல்லை; அதை விட மோசம். முதல்வர் எடப்பாடி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையை கவனித்து வருகிறார். அந்த துறையுடன் காவல்துறையை கவனிப்பது மிகவும் சிரமம். இதற்கு முன்னர் எத்தனையோ முதல்வர்கள் இருந்துள்ளனர். முதல்வராக இருந்தவர்கள் காவல்துறை, நிர்வாகப்பணியை கவனிப்பார்கள். ஆனால், இந்த முதல்வர் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையை வைத்துள்ளார். காரணம், அதில், தான் கமிஷன் வரும். பணம் சம்பாதிக்கலாம் என்பதற்காக முதல்வர் கையில் வைத்துள்ளார். காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் செய்வதாக புகார் வருகிறது. காவல்துறைக்கு முக்கியமான பொருளே அது தான். அப்படிபட்ட வாக்கி டாக்கியில் ஊழல் நடந்து இருப்பதை பார்க்கும் போது சட்டம் ஒழுங்கு நிலை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை உணர முடிகிறது.

 
தமிழகத்தில் தினமும் 3 கொலைகள் முதல் 6 கொலைகள் வரை சராசரியாக நடக்கிறது. இந்த கொலை பல்வேறு காரணங்களுக்காக நடக்கிறது. அதற்கு யார் காரணம் என்றால்,  சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் காவல்துறை தான். இந்த காவல்துறையை கவனிக்கும் முதல்வரை தான் நாம் குற்றம்சாட்ட முடியும். இந்த ஆட்சியில் சராசரியாக கொலைகள் நடப்பதால் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள். கடந்த 6 மாதங்களாக இந்த கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது.  திருச்சியில் உள்ள நகைகடையில் பெரிய அளவில் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் காவல்துறையில் உள்ள உயர்அதிகாரி லஞ்சம் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பொருளை காக்கக்கூடிய காவலர்களே லஞ்சம் வாங்கினால் திருட்டை எப்படி தடுக்க முடியும்? ரவுடிகளிடம் மாமூல் வாங்குவது வாடிக்கையானது; அப்படி லஞ்சம் வாங்கினால் ரவுடிகளை எப்படி ஒடுக்க முடியும். இதனால், மக்கள் பாதுகாப்பு உணர்வின்றி உள்ளனர். நடுரோட்டில் செயின் பறிப்பு சம்பவம் சாதாரணமாக நடக்கிறது. இந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.

இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே பேசியுள்ளோம். சாதாரண டாஸ்மாக் கடையை பூட்ட போராடிய பெண்ணை கன்னத்தில் அதிகாரி அடிக்கின்றார். அந்த அதிகாரிக்கு தான் புரோமோஷன் கொடுக்கின்றனர். அந்த அதிகாரி இருந்த கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தான் அந்த பெண் ஒருவர் மீது பாலியல் புகார் கொடுக்கிறார். இது போன்ற பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பெயரை வெளியில் சொல்லக்கூடாது. ஆனால், புகார் கொடுத்த பெண் பெயரை அந்த அதிகாரி வெளியிடுகிறார். காரணம், மற்ற பெண்கள் புகார் அளிக்க கூடாது என்பதற்காக இது போன்று செய்கிறார். ஆளும் கட்சி முக்கிய பிரமுகர் மகன் சிக்கியிருப்பதால் காவல்துறை இப்படி வளைந்து கொடுக்கிறது. ஆளும்கட்சிக்கு துணையாக காவல்துறையே போனால் காவல்துறை எப்படி நியாயமான துறையாக இருக்கும். இதற்கு ஆட்சியில் இருக்கிற தலைமை சரியில்லை. அவருக்கு ஆட்சி நடத்த தெரியாது. இந்த  ஆட்சி இருக்கும் வரை சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரிக்கத்தான் செய்யும்.

Tags : Tamil Nadu , Tamilnadu, Law, Order, Troubleshooting
× RELATED ஜெயங்கொண்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க போலீசார் அணிவகுப்பு பேரணி