×

தீவிரவாத செயல்பாட்டை ஒடுக்குகிறது என்ஐஏ

சிபிஐயில் இருந்து தான் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ என்கிற தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. சிபிஐ கவனித்து வந்த பணிகளை இந்த அமைப்பிடம் காலத்தின் சூழ்நிலை கருதி அளிக்கப்பட்டது. இருப்பினும், என்ஐஏ என்கிற அமைப்புக்கும், சிபிஐ என்கிற அமைப்புக்கும் ஒரே ஒரு வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாடு என்னவென்றால், சிபிஐ அமைப்பு மாநில அரசின் அனுமதி கேட்க வேண்டும். அவர்கள் என்ன காரணத்திற்காக விசாரணை செய்ய மாநிலத்துக்கு வருகின்றனர்; யாரிடம் விசாரிக்க வேண்டும்  என்பதை முழுமையாக சொல்ல வேண்டும். அப்போது, தான் அந்த அமைப்பால் ஒரு மாநிலத்திற்குள் சென்று சோதனையோ அல்லது விசாரணையோ செய்ய முடியும். மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் சிபிஐ எதுவும் செய்ய முடியாது. மாநில அரசு அனுமதி தராமல் இருக்க அதற்கு அதிகாரம் உண்டு. மாநில போலீசார் விசாரிக்கிறது; அதுவே போதுமானது என்று நம்புவதாக கூறிவிட்டால் சிபிஐ  அங்கு நுழைய முடியாது.
ஆனால், என்ஐஏவுக்கு அது போன்று அனுமதி கேட்க வேண்டிய தேவையில்லை. மாநில போலீசார் உதவி தேவையே தவிர, மாநில அரசின் அனுமதி தேவையில்லை. சம்பந்தப்பட்ட மாநிலத்துக்குள் நுழைந்து, குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணிக்க வேண்டும் என்றோ, விசாரிக்க வேண்டும் என்றோ விரும்பினால், அதற்கு அவர்களுக்கு மாநில போலீசார் உதவ வேண்டும்.

 
அவர்கள் எந்த அனுமதியும் கேட்காமல் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் சென்று ேசாதனை செய்யலாம். அதே நேரத்தில் அவர்கள் எந்த மாநிலத்தில் குறிப்பிட்ட ஒரு நபர் வசித்து வந்தாலும், அவரை விசாரிக்க போகலாம். தீவிரவாத சந்தேகத்தின் பேரில் சிலரை விசாரிக்க வேண்டும்; ஆதாரங்கள் இருப்பின் கைது செய்ய வேண்டும் என்றால், அதற்கு என்ஐஏ அதிகாரிகள் குழு உரிய திட்டமிடல் செய்தபின், சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கு செல்ல தயாராகி விடுவர். அவர்கள் விசாரணை வளையத்துக்குள் வைக்க வேண்டிய குறிப்பிட்ட நபர்களை அடையாளம் காண வேண்டும்; அவர்கள் சந்தேகத்துக்கிடமான நபர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்த முடியும். இதற்காக என்ஐஏ அமைப்பு மாநில அனுமதிக்காக காத்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. மாநிலத்தில் சென்று சோதனை செய்து விசாரணை நடத்தியபின், சம்பந்தப்பட்ட நபர் அல்லது நபர்களை கைது செய்து தங்கள் தலைமையிடத்துக்கு அழைத்து செல்ல முடியும்.
 
அதே போன்று ஏஎன்ஐஏ அமைப்பை மாநில அரசுகள் அழைத்தாலும் அங்கு குழுவினர் சென்று விசாரணையோ அல்லது சோதனையோ நடத்தலாம். மாநில போலீசார் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சிபிஐ போன்று இல்லாமல் என்ஐஏ என்கிற அமைப்புக்கு எல்லையில்லா அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்ற நோக்கை கருத்தில் கொண்டு இந்த தேசிய புலனாய்வு முகமை செயல்படுகிறது. தேசிய நலனை கருத்தில் கொண்டு செயல்படும் இந்த என்ஐஏ எப்போதும், எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் சோதனை செய்யும் அதிகாரத்தை தன் வசம் வைத்துள்ளது. அதனால் தான், தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் செயல்பாடுகளை என்ஐஏ தீவிரமாக கண்காணித்து கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இந்த அமைப்பு எப்போது விழிப்புடன் இருந்து நாட்டில் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் பார்த்து கொள்கிறது. இதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : NIA , Terrorism, activism, suppression, NIA
× RELATED பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு...