×

திருச்சியில் இருந்து புறப்பட இருந்தது ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் மலேசியா விமானம் திடீர் ரத்து: 115 பயணிகள் கடும் அவதி

திருச்சி: ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் மலேசியா செல்ல இருந்த விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் 115 பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர்ஏசியா விமானம் 115 பயணிகளுடன் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. அந்த விமானத்தில் திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் பகுதியை சேர்ந்த முத்துவேல் (54) என்பவர் வந்துள்ளார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு விமானத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டது. அந்த விமானம் இரவு 10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கிய உடன் பயணி முத்துவேல் கீழே இறக்கப்பட்டார்.

அங்கு உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்சில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமானம் பறக்கும்போது 7 ஆக்சிஜன் சிலிண்டர் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த விமானத்தில் குறைந்த அளவில் ஆக்சிஜன் சிலிண்டர் இருந்ததால் விமான ஆணையத்தின் சார்பில் விமானம் பறப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து இரவு 10.30 மணிக்கு மலேசியா புறப்பட இருந்த அந்த விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்த 115 பயணிகளும் கீழே இறக்கப்பட்டனர். இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இவர்களில், 50 பயணிகள் மட்டும் நள்ளிரவு 12மணிக்கு மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.   மீதிஇருந்த 65 பயணிகள் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் நேற்று காலை மலேசியா சென்ற ஏர்ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்றுமுன்தினம் இரவு புறப்படாமல் இருந்த விமானத்திற்கான ஆக்சிஜன் சிலிண்டர் மலேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு இந்த விமானம் புறப்பட்டு செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆக்சிஜன் சிலிண்டர் வரவழைக்கப்பட்டு மீண்டும் அந்த விமானம் நேற்று காலை 11.30க்கு மலேசியா புறப்பட்டு சென்றது.


Tags : Malaysian ,Trichy ,Malaysia ,crashes , Trichy , Malaysia crashes due ,o lack of oxygen , cylinder
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...