×

புளியந்தோப்பு காவல் சரகத்தில் 320 காவலர் பணியிடங்கள் காலி: குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பு காவல் சரகத்தில் 600 காவலர் பணியிடங்களில் 280 பேர் மட்டுமே பணிபுரிந்து வருவதால், குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன், போலீசார் பணிச்சுமையால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புளியந்தோப்பு காவல் சரகத்தில் ஓட்டேரி, புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், செம்பியம், திருவிக நகர், பெரவல்லூர், வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்கேபி நகர்  என 9 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதுதவிர 3 மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. இந்த காவல் சரகத்தில் ஒரு துணை ஆணையர், 3 உதவி ஆணையர்கள் தலைமையில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ மற்றும் காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அதன்படி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 80 காவலர்கள் இருக்கவேண்டும். ஆனால், தற்போது 40 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். எம்கேபி நகர் காவல் நிலையத்தில் 40 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 29 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். வியாசர்பாடி காவல் நிலையத்தில் 48 காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், 24 காவலர்கள் மட்டுமே உள்ளனர். இதேபோல்,  புளியந்தோப்பு சரகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மிகவும் குறைவான காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

 புளியந்தோப்பு சரகத்தில் உள்ள காவல் நிலையங்களில் மொத்தம் 600 காவலர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 280 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், காவலர்கள் விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை மற்றும் பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்கேபி நகர் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் அதிகளவில் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் என்பதால், அங்கு போலீசார் எப்போதும் தீவிர கண்காணிப்பில் இருப்பது வழக்கம். ஆனால், தற்போது, போலீசார் பற்றாக்குறையால் சரிவர ரோந்து பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், மேற்கண்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.  

மேலும், குற்ற வழக்குகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே, புளியந்தோப்பு காவல் சரகத்தில் போதிய காவலர்களை நியமிக்க போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், ‘‘புளியந்தோப்பு சரகத்தில் குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறுவதால் வேலையும் அதிகம்.   இதனால், ஆய்வாளர்கள் முதல் காவலர்  வரை புளியந்தோப்பு சரகத்திற்கு வர தயக்கம் காட்டுகின்றனர். அப்படி மீறி வந்தாலும் ஒரு சில மாதங்களில் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை பிடித்து உடனடியாக இங்கிருந்து வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் பெற்று செல்கின்றனர். மேலும், காவல்துறையில் தவறு செய்தவர்களை தண்டிக்க, அவர்களை புளியந்தோப்பு சரகத்தில் பணியமர்த்துகின்றனர். இங்கு குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க காவலர்கள் பணியிடம் காலியாக உள்ளதே காரணம். இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

வழக்குகள் தேக்கம்
சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமங்கலம், கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு மார்க்கெட், நொளம்பூர், ஜெஜெ. நகர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பாலியல் தொல்லை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்க வருகின்றனர். அதன்படி நாள் ஒன்றுக்கு 10க்கும் மேற்பட்ட புகார்கள் இந்த காவல் நிலையத்தில் பதியப்படுகிறது. இங்கு, இன்ஸ்பெக்டர் உட்பட 15 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 6 போலீசார் மட்டுமே பணியில் இருப்பதால், புகார் மீது விசாரணை நடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. தற்போது, இங்கு பணிபுரிபவர்களும் வழக்கு விசாரணை சம்மந்தமாக மகிளா நீதிமன்றங்களுக்கு சென்று விடுவதால், காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த காவல் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக பெண் ஆய்வாளர் இல்லாததால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.

Tags : police workplaces ,police station ,Puliyanthoppu ,police offices ,Puliyanthoppa , 320 police ,offices vacated,Puliyanthoppa police station,Increase in crime
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது