×

அபிஜித்தை விமர்சித்த விவகாரம் 10 ஆண்டு முயன்றாலும் புரிய வைக்க முடியாது: மத்திய அமைச்சர் பற்றி ராகுல் காந்தி காட்டம்

புதுடெல்லி: நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜிக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை விமர்சித்துள்ள  ராகுல் காந்தி, ‘10 ஆண்டுகள் முயற்சித்தாலும் இவர்களுக்கு புரியவைக்க முடியாது,’ என்று கூறியுள்ளார். பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக சமீபத்தில் கருத்து கூறினார். இது பற்றி புனேவில் பேட்டி அளித்த மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ‘நோபல் பரிசுப் பெற்ற அபிஜித் பானர்ஜி, கம்யூனிஸ்ட் சார்புடையவர் போல் பேசுகிறார்,’ என்று விமர்சித்தார். கோயலின் இந்த கருத்தால், அபிஜித் பானர்ஜி கவலை அடைந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  நேற்று தனது டிவிட்டர் பதிவில்,  ‘அன்புக்குரிய பானர்ஜி, குருட்டு பிடிவாதமுள்ள இவர்கள் கண்மூடித்தனமாக வெறுக்கிறார்கள், இவர்களுக்கு தொழில் முறை குறித்து எதுவும் தெரியாது. உங்களால் அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாது. நீங்கள் பத்து ஆண்டுகள் முயன்றாலும் புரியவைப்பது சாத்தியமல்ல. லட்சக்கணக்கான இந்தியர்கள் உங்கள் பணிக்காக பெருமை கொள்கிறார்கள்,’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், பியூஷ் கோயல் கருத்துக்கு நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Rahul Gandhi ,Union Minister Union Minister , Rahul Gandhi's,view , Union Minister
× RELATED சொல்லிட்டாங்க…