×

பிரக்சிட் காலக்கெடு நீட்டிப்பு கோரி கையெழுத்திடாத கடிதம் அனுப்பினார் போரிஸ்

லண்டன்: பிரக்சிட் காலக்கெடுவை நீட்டிக்க கோரி, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றியதால், கையெழுத்திடாத கோரிக்கை கடிதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுப்பினார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான புதிய பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான கெடு இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவதால், அதை நிறைவேற்றுவதற்காக இங்கிலாந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நேற்று முன்தினம் கூட்டப்பட்டது. இந்த விவாதத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடங்கி வைத்தார். ஆனால், புதிய பிரக்சிட் ஒப்பந்த விதிமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், ஒப்பந்த காலக்கெடுவை ஜனவரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற முக்கிய திருத்த தீர்மானத்தை பழமைவாத கட்சி எம்.பி ஆலிவர் லெட்வின் தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றது.

ஆனால், பிரக்சிட் காலக்கெடு நீட்டிப்பு குறித்து ஐரோப்பிய யூனியனுடன் பேசமாட்டேன் என போரிஸ் ஜான்சன் உறுதியாக கூறினார். இருப்பினும்.  நாடாளுமன்றத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு பிரக்சிட் காலக்கெடு நீட்டிப்பு கோரிய கடிதத்தை ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்ப அவர் உத்தரவிட்டார். ஆனால், தனது அதிருப்தியை வெளிப்படுத்த, அந்த கடிதத்தில் அவர் கையெழுத்திட மறுத்து விட்டார். மேலும், முதல் கடிதத்துக்கு முரணான கருத்துடன் மற்றொரு கடிதத்தையும் ஐரோப்பிய யூனியனுக்கு அவர் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. ‘பிரதமரின் செயல் குழந்தைத்தனமாக உள்ளது. அவர் மீது நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வரலாம்,’ என தொழிலாளர் கட்சி எம்பி ஒருவர் கூறியுள்ளார்.

Tags : Boris ,Brexit , Boris sent,unsigned ,letter demanding,extension , Brexit deadline
× RELATED டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் மரண,...