×

உலகின் மிக நீண்ட இடைநில்லா பயணம் 19 மணி நேரம் தொடர்ந்து பறந்த ஆஸி. விமானம்: முதல் சோதனை வெற்றி

சிட்னி: உலகின் மிக நீண்ட இடைநில்லா பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய விமானம் எங்குமே நிற்காமல் 19 மணி நேரம், 16 நிமிடங்கள் தொடர்ச்சியாக பறந்து முதல் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சர்வதேச அளவில் மிக நீண்ட தூரத்திற்கு இடைநில்லா விமான சேவையை வழங்குவதில் விமான நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வரிசையில், உலகிலேயே மிக நீண்ட தூரத்திற்கு எங்கும் நிறுத்தாமல் செல்வதற்கான முயற்சியில் ஆஸ்திரேலியாவின் குவென்டாஸ் விமான நிறுவனம் களமிறங்கி உள்ளது. இதற்கான முதல் சோதனையாக அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி வரை விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த சோதனையில் போயிங் 787-9 ரக விமானம் ஈடுபடுத்தப்பட்டது. நேற்று முன்தினம் நியூயார்க்கில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், 19 மணி நேரம் 16 நிமிடங்கள் வானில் தொடர்ச்சியாக 16,200 கிமீ பயணம் செய்து சிட்னி விமான நிலையத்தை நேற்று காலை வந்தடைந்தது.

இதில், விமான ஊழியர்கள் உட்பட 49 பேர் பயணம் செய்தனர். 4 பைலட்கள் இணைந்து விமானத்தை இயக்கினர். இதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் விமான நிறுவன அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ குழுவினர்களே. இப்பயணத்தில், வானில் பல்வேறு நேர மாற்றங்களுடன் பயணிப்பதால், பயணிகளின் பயண களைப்பு எப்படியிருக்கும், விமானிகளின் மூளை நரம்புகளின் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.விமானத்தில் தொடர்ச்சியாக 16,200 கிமீ பறப்பதற்கு தேவையான அளவு எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. விமானத்தினுள் எந்த சரக்குகளும், அதிக பாரங்களும் ஏற்றப்படவில்லை. சோதனை முயற்சி என்பதால் 49 பயணிகள் மட்டுமே பயணித்தனர். பயணத்தின் போது, பயணிகள் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏனெனில், இரவு பகல் என மாறி மாறி கால நேரம் மாறுவதை அவர்களை சோர்வடையச் செய்யும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக முடிந்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என குவென்டாஸ் விமான நிறுவன சிஇஓ ஆலன் ஜாய்ஸ் கூறி உள்ளார். இதுபோன்று 3 சோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 2வது முயற்சியாக லண்டன் முதல் சிட்னி வரை இடைநில்லா விமானம் இயக்கப்பட உள்ளது. 3 முயற்சிகளும் வெற்றிகரமாக அமைந்தால், 2022 அல்லது 2023ல் மிக நீண்ட வழித்தடங்களில் இடைநில்லா பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என குவென்டாஸ் அறிவித்துள்ளது.

*தற்போது சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நோக்கி இயக்கப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமே மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானமாகும். இது இடைநில்லாமல் 18 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு பயணிக்கிறது.
*ஆக்லாந்து-தோஹா இடையே இயக்கப்படும் கத்தார் ஏர்வேஸ் விமானம் 17 மணி நேரம் 40 நிமிட பயணம் மேற்கொள்கிறது.
*பெர்த்-லண்டன் இடையே இயக்கப்படும் குவென்டாஸ் 17 மணி நேரம் 20 நிமிடங்கள் பயணம் செய்கிறது.

Tags : cruise ,world ,Aussie ,test win , Aussie, longest nonstop, world, flew ,19 hours. Flight, First test win
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்