×

ரூ.26 கோடி செலவில் அமைகிறது யானைகவுனியில் புதிய மேம்பாலம் : டெண்டர் கோரியது மாநகராட்சி

சென்னை: யானைகவுனியில் ₹26 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. வடசென்னை பகுதியில் முக்கிய மேம்பாலமாக யானைகவுனி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலமானது வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலை போன்ற சாலைகளை இணைக்கிறது. இதில், 50 மீட்டர் நீளமுள்ள மேம்பால பகுதியை ரயில்வே நிர்வாகம் பராமரித்து வந்தது. மேம்பாலத்தின் சாய்தளம் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இருப்பு பாதையின் கூடுதல் விரிவாக்க பணிகளுக்காகவும், பாலம் பழுதடைந்த காரணத்தாலும் 27.12.2016 அன்று இந்த பாலம்மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இந்த பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மின் வாரியத்தின் மின்வடங்கள் மற்றும் மின் கோபுரங்கள் மாற்றிய பின்னர், 150 மீட்டர் நீளத்தில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய பாலம் கட்ட சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. பாலத்தின் மேற்கு புறம் 250 மீட்டர் நீளம் மற்றும் கிழக்கு புறம் 180 மீட்டர் நீளம் கொண்ட சாய்வுதளம் அமைக்கும் பணியை  சென்னை மாநகாட்சி மேற்கொள்ளும். இதற்காக ₹26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பாலத்தில் உள்ள மின்வாரியத்தின் மின்வடங்கள் மற்றும் மின்கோபுரங்களை மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்தவுடன், பழைய பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Elephant House ,Corporation , Construction ,new tender, elephant gown,Rs.
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...