×

ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் மாசடையும் ரெட்டேரி: பொதுப்பணித்துறை அலட்சியம்

புழல்: ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், ரெட்டேரி தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி ரெட்டேரியை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாதவரம், லட்சுமிபுரம் பகுதியில் ரெட்டை ஏரி உள்ளது. இதன் ஒரு பகுதி புழல் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியிலும் மற்றொரு பகுதி லட்சுமிபுரம் பகுதியிலும் வருகிறது. இதற்கு நடுவே ஜிஎன்டி சாலையும், மற்றொரு பகுதியில் செங்குன்றம்-செம்பியம் சாலையும் உள்ளது. சுமார் 600 ஏக்கர் கொண்ட ரெட்டேரி தற்போது ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி, அந்த இடத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் பாதி அளவுக்கு சுருங்கிவிட்டது. இது தவிர, லட்சுமிபுரம் பகுதியில் உள்ள கறிக்கடையில் சேரும் கழிவுகளை ஏரியில் கொட்டி வருவதால் தண்ணீர் மாசடைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் குப்பையை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.ரெட்டேரியை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள், கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் ரெட்டேரியை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டம் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. .

இதுகுறித்து சமூக ஆர்வலர் சசிதரன் கூறுகையில், ‘‘சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி வறண்டபோது ரெட்டேரியில் இருந்து தான் குடிநீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்பாக விவசாயிகள் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்து வந்தனர்.  தற்போது ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதால் ஏரி பாதியாக சுருங்கிவிட்டது. இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு ஏரியை பயன்படுத்தி வருகின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்தாலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது. ஏரியில் குப்பை கழிவுகளும் பெருமளவு கலந்துவிட்டதால் தண்ணீர் கெட்டுவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகிவிட்டது. லட்சுமிபுரம், கல்பாளையம், செகரட்டரி காலனி, பரிமளம் நகர், புழல், எம்ஜிஆர் நகர், மதுரா மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் வருகிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு ரெட்டேரியை பாதுகாக்க வேண்டும். சென்னை கோவளத்தில் உள்ளது போல் படகு குழாம் அமைத்து சுற்றுலா தலமாக மாற்றினால் அரசுக்கு வருமானம் கிடைக்கும். ஏரியும் நன்றாக இருக்கும்’’ என்றார்.

Tags : Retailers ,homes ,Public works department , Sewerage ,sewage ,occupied, homes
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிக்கு...