×

மாமல்லபுரத்தில் பார்வையாளர் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்குகிறது. மாமல்லபுரம் வழியாக செல்லும் பயணிகளும், சுற்றுலாவிற்காக வந்து மாமல்லபுரத்தை பார்ப்பவர்களும் பயன் பெற வேண்டும். இதன் மூலம் மாமல்லபுர மக்களும், வியாபாரிகளும், விற்பனை செய்பவர்களும் பொருளாதாரம் ஈட்டி வாழ்வாதாரத்தில் சிறக்க வேண்டும். தற்போது மாமல்லபுரமானது பிரதமர் ேமாடி, சீன அதிபர் சந்திப்புக்கு பின்பு மேலும் பிரபலமாகி மாமல்லபுரத்தை நாடி வருகின்ற பார்வையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாகிறது. இங்குள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. எனவே மாமல்லபுரத்திற்கு புராதன சின்னங்களை பார்வையிடுவதற்கு வருகின்ற உள்ளூர் சுற்றுலாப்பயணிகளிடம் புதியதாக கட்டணம் ஏதும் அதிகமாக வசூலிக்கக்கூடாது.

இப்போது மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.40ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.600ம் வசூலிக்க மத்திய தொல்லியல் துறை முடிவு எடுத்து அமல்படுத்த தொடங்கியிருப்பதை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழரின் பெருமையை, வரலாற்றை, தொன்மையை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தை பார்வையிட குறைந்த பட்சம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் வசூல் செய்யாமல் இருப்பது சாலச்சிறந்தது. மாமல்லபுரத்திற்கு தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஏன் வெளிநாட்டில் இருந்தும் வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக பார்வையாளர் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.


Tags : Mamallapuram ,government ,GK Vasan , GK Vasan , central government , not to increase visitor fees , Mamallapuram
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...