கேரளாவில் நாளை 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்: 20 வாக்குச்சாவடிகளில் இனிப்பு வழங்க ஏற்பாடு

திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை இடைத்தேர்தல் நடக்கவுள்ள வட்டியூர்க்காவு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாதிரி வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில்  வட்டியூர்க்காவு, அரூர், கோன்னி, எர்ணாகுளம் ஆகிய 4 தொகுதி எம்.எல்.ஏ.க்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து இவர்கள் 4 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.  மஞ்சேஸ்வரம் தொகுதி முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அப்துல் ரசாக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார்.

இதையடுத்து இந்த 5 தொகுதிகளில் நாளை(21ம் தேதி) இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த 5 தொகுதிகளிலும் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ. இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 5 தொகுதிகளில் அரூர் தவிர மற்ற 4  தொகுதிகளும் காங்கிரஸ் கூட்டணி வசமிருந்தவை.  நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு 5 தொகுதிகளிலும் மொத்தம் 3,696 போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ேமலும் 6 கம்பெனி மத்திய போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வட்டியூர்க்காவு தொகுதியில் 20 வாக்குப்பதிவு மையங்கள் மாதிரி வாக்குச்சாவடிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்ய தேர்தல் ஆணையம்  தீர்மானித்துள்ளது. அதன்படி வாக்களிக்க வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும். மேலும் வரிசையில் நின்று சிரமப்படாமல் இருக்க அவர்களுக்கு டோக்கன் வழங்கி இருக்கைகளில் அமரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர், மின்விசிறி, செய்தித்தாள்களும் வழங்கப்படும். சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு காய்கறி விதைகள் மற்றும் மரக்கன்றுகளும் வழங்க ஏற்பாடு ெசய்யப்பட்டுள்ளது. இதுதவிர வாக்காளர்களின் வசதிக்காக உதவி மையங்களும் அமைக்கப்படுகின்றன.

Tags : Kerala , 5 seats in Kerala to be held tomorrow
× RELATED ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி