×

புயலால் பாதித்த ஜாம்புவானோடை கிராமத்தில் ஒரே நாளில்2 கிமீ தூரத்திற்கு மரக்கன்றுகள் நட்டு மக்கள் அசத்தல்

முத்துப்பேட்டை: புயலால் பாதிப்புக்குள்ளான ஜாம்புவானோடை கிராமத்தில் ஒரே நாளில் 2 கிமீ தூரத்திற்கு மரக்கன்றும் நட்டு மக்கள் அசத்தினர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியை கடந்தாண்டு நவம்பர் 15ம்தேதி கஜா புயலின் கோரத்தண்டவத்தால் இப்பகுதியில் ஒட்டுமொத்தத்தையும் புரட்டி போட்டது. இதில்தென்னை உள்ளிட்ட லட்சக்கணக்கான மரங்களை முறித்து அடியோடு சாய்ந்தது. வெயில் தாக்கத்தால் பகல் நேரம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கி கிடக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் குளங்கள் வறண்டு வறட்சியும் இப்பகுதியில் கடும் குடிநீர்தட்டுப்பாடு ஏற்பட்டு தலைவிரித்தாடியது. இது போன்று மாவட்டம் முழுமைக்கும் சூழல் மாறியதால் இதையடுத்து சுற்றுச்சூழலை காத்து மழையை தருவிக்கும் மரங்களை வளர்க்க தீர்மானித்து அரசு திட்டநிதியும் ஒதுக்கீடு செய்தது. நாடு தழுவிய இயக்கமாவும் மரம் வளர்த்தல் கொண்டு செல்லப்பட்டது.முத்துப்பேட்டை அடுத்த கரையங்காடு, கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு உள்ளிட்ட கடலோர கிராம பகுதிகளிலும் மரக்கன்றுகளும் பனைவிதைகளும் முழுவீச்சில் நடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று முத்துப்பேட்டையை ஒட்டியுள்ள ஜாம்புவனோடை கிராமம். இந்த கிராமத்தில் இருந்த பெருமளவில் தென்னை மரங்கள் மற்றும் நிழல் தந்த அரியவகை மரங்கள் உட்பட லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்தது. இதனால் சோலைவனமாக காணப்பட்ட ஜாம்புவானோடை மரங்கள் இன்றி பாலைவனமாக காட்சியளிக்கிறது. இதையடுதது அப்பகுதியில் இயற்க்கை ஆர்வலர்களும் கிராம மக்களும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இந்தநிலையில் கஜா புயலில் வீழ்ந்த மரங்களுக்கு பதில் அதனை ஈடு செய்யும் வகையில் களத்தில் இறங்கிய கிராம மக்கள் அப்பகுதியை சேர்ந்த முன்னாள் அறங்காவலர்குழு தலைவர் கந்தசாமி தலைமையில் திரண்டு நேற்று காலை ஜாம்புவானோடை ஆர்ச் முதல் காலனி வரை உள்ள சாலையோரம் வாய்க்காலை ஒட்டி சுமார்2கிமீ தூரத்திற்கு நூற்றுக்கணக்கான மரங்களை ஒரே நாளில் நட்டனர்.

அதனுடன் மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பாக கூண்டுகளும் அமைக்கப்பட்டது. மேலும் அதனை தண்ணீர் ஊற்றி பராமரிக்க பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டது. முன்னதாக துவங்கிய மரக்கன்றுகள் நடும்விழாவில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வனச்சரக அலுவலர்தாஹீர்அலி ஆகியோர்பங்கேற்று விழாவை துவக்கி வைத்தனர். இதில் கிராம கமிட்டி தலைவர் ஜீவானந்தம் உட்பட வனத் துறையினர்,இயற்கை ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கந்தசாமி கூறுகையில்: கஜாவில் வீழ்ந்த எங்கள் கிராமத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்துடனும் மரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இன்றைக்கு முதல் கட்டமாக சுமார் 2கிலோ மீட்டர் தூரத்திற்கு மரக்கன்றுகளை நட்டுள்ளோம் என்றார்.

Tags : village ,storm. ,storm , village , Zambuwanodai, affected , storm , 2 km in a day
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...