×

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளம் பாய்வதால், சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில், தொடர்ந்து, கனமழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக, பரளியாறு, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாட்கள் முதலாக, கோதையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.

இதனால், குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. திற்பரப்பு அருவிக்குச் செல்லும் நடைபாதையில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. வெள்ளப்பெருக்கின் காரணமாக, திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இன்று விடுமுறை நாள் என்பதால், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், ஏமாற்றுத்துடன் திரும்பினர். இருப்பினும், தங்கள் வாட்டத்தைப் போக்க, வெள்ளம்பெருக்கெடுத்து பாயும் திற்பரப்பு அருவியின் பின்னணியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டு, ஊர் திரும்பினர்.

காலி மதுபாட்டில்களால் ஆபத்து

கரையோரப் பகுதிகளில் கிடக்கும் மரத்தடிகள், தேங்காய்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு, அருவியில் விழுகின்றன. இதில், காலி மது பாட்டில்களும் அருவியில் குளிப்போரின் மீது விழுகின்றன. தரையில் விழுந்து உடையும் மதுபாட்டில்களால் சுற்றுலாப் பயணிகள் காயமடையும் அபாயம் உள்ளது.

Tags : Floods ,monsoon ,Northeast Monsoon Intensifies , Northeast monsoon, open waterfall, tourists, bathing
× RELATED கோடை காலம் தொடங்க உள்ளதால்...