×

கடல் அரிப்பினால் அரிச்சல்முனை ரவுண்டானா சுவர் விழும் அபாயம்: சுற்றுலாப்பயணிகளுக்கு தடை?

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல்முனை நெடுஞ்சாலை ரவுண்டானா சுற்றுச்சுவர், கடல் அரிப்பினால் சேதமடைந்து உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் இருவழித்தடத்துடன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக முகுந்தராயர்சத்திரம் முதல் தனுஷ்கோடி வரையிலும், இரண்டாம் கட்டமாக தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை கடற்கரை வரையில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அரிச்சல்முனை கடற்கரையில் சாலை முடிவடையும் இடத்தில், வாகனங்கள் வந்து செல்லும் வகையில் சிங்கமுக ஸ்தூபியுடன் வட்ட வடிவில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. இங்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக தனுஷ்கோடி கடல் பகுதியில் வீசும் பலத்த காற்று, கடல் சீற்றத்தினால் அரிச்சல்முனை பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு ரவுண்டானா பகுதி சாலை தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. தொடர் மழையால் சாலையின் இருபுறமும் விரிசல் ஏற்பட்டு சமதளமாக கொட்டப்பட்ட மணல், மழை நீருடன் கரைந்து வெளியேறியுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் கடல் அரிப்பில் தடுப்பு சுவரும் சாலையும் சேதமடைந்து ரவுண்டானா உடைந்து கடலில் சரிந்து விழும் நிலை உள்ளது.இதனால் அரிச்சல்முனை ரவுண்டானா பகுதிக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி - அரிச்சல்முனை இடையே உள்ள தார்ச்சாலையும் கடல் அரிப்பினால் சேதமடையும் நிலை உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் அரிச்சல்முனை பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : sea erosion ,erosion ,sea , Sea erosion, erosion, wall, risk of falling, tourist, ban?
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!