×

தீபாவளி பண்டிகைக்காக செட்டிநாட்டில் தயாராகுது ‘செம டேஸ்ட்’ பலகாரங்கள்: சுவைமிகு ஸ்வீட், காரத்தை கடிக்க ரெடியா? பாரினுக்கும் ‘பறக்குது’ பலகார பார்சல்

காரைக்குடி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவைமிகு செட்டிநாட்டு பலகாரங்கள், சுடச்சுட தயாராகி விற்பனையாகி வருகின்றன. வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் ஒரே வாரத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளின்னாலே கலர்புல் வாண வேடிக்கைகள், மத்தாப்புகள் மனதை கவரும். அதே நேரம் வீட்டிற்குள் கடித்து நொறுக்க விதவிதமான பலகாரங்களும் ரெடியாக இருக்கும். ஒரு காலத்தில் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பே பலகாரங்கள் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இப்போது காலம் மாறி விட்டது. பலகாரங்களை கடைகளிலும், ஆர்டர் செய்தும் வாங்கி மக்கள் பழகி விட்டனர்.

தமிழர்களின் உணவு பாரம்பரியம், பண்டைய கால பழக்க வழக்கங்களுக்கு சான்றாக, கலாச்சார சின்னமாக செட்டிநாடு விளங்குகிறது.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டிநாடு பகுதிகளான காரைக்குடி, கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத்தொழிலாக செட்டிநாட்டு பலகாரங்களை தயார் செய்து வருகின்றனர். திருமணங்கள், வீட்டு விசேஷங்களுக்கு மொத்தமாக ஆர்டர் கொடுப்பவர்களுக்காக இங்கு பலவகை பலகாரங்கள் செய்யப்படுகின்றன. தற்போது  தீபாவளி  பண்டிகைகளுக்காக பலகாரங்கள் செய்யப்பட்டு மொத்தமாகவும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பலகாரங்களுக்கு தேவையான பொருட்களை கைப்பக்குவமாக தயார் செய்வதாலும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்தாததால் ருசி அதிகமாக உள்ளது. இவ்வகை பலகாரங்கள்  நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போவதும் இல்லை. உடலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. இதனால் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு எப்போதுமே கிராக்கி அதிகம்.

இப்பகுதியில் தேன்குழல் (முறுக்கு), கைமுறுக்கு, பாசிப்பருப்பு உருண்டை, உப்பு சீடை, சீப்பு சீடை, மகிழம்பூ முறுக்கு, அதிரசம், 4 முதல் 9 சுற்று வரை உள்ள கைச்சுற்று முறுக்கு உள்பட 50 வகையான பலகாரங்கள் தயார் செய்யப்படுகிறன. இப்பலகாரங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதே சுவையுடன் வீட்டில் தயார் செய்ய விரும்புபவர்களுக்கு என முறுக்கு மாவு, இடியாப்ப மாவு, புட்டு மாவு, அதிரச மாவு, சத்து மாவு, தேன்குழல் மாவு ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது. தேன்குழல் (முறுக்கு) 1 - ரூ.12 - 15 முதல், சீப்பு சீடை 1 கிலோ - ரூ.300 - 600, உருட்டு சீடை (1 கிலோ) - ரூ.250 - 500, அதிரசம் 1 - ரூ.10 - 15, மாவு உருண்டை 1 ரூ.8 -10, நைஸ் சீடை ஒரு கிலோ - ரூ.450 - 600, கைச்சுற்று முறுக்கு 1 - ரூ.15 முதல் 45 வரை(சுற்றுக்கேற்ப) விற்பனையாகிறது.

இதுகுறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு ஆர்டர்கள் அதிகளவில் வரும். தற்போது மதுரை, சென்னை, கோவை போன்ற பகுதிகளில் செட்டிநாட்டு பலகார கடைகள் துவங்கப்பட்டுள்ளன. இக்கடைகளுக்காக ஒரு சில அயிட்டங்கள் மட்டும் இங்கிருந்து அனுப்பப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கு இங்கிருந்து அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பருப்பு, எண்ணெய் வகைகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பலகாரங்களின் விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும், தீபாவளிக்காக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்’’ என்றனர்.

Tags : Delicious Sweet ,boards ,Diwali ,Bar ,Barin. Chevrolet , Diwali Festival, Chettinad, When Semi-Taste Code Boards, Tasteful Sweet, Caramel, Fly To Bar
× RELATED ஹீரோவான வில்லன்