×

விடுதலை புலிகள் மீதான தடையை நியாயப்படுத்தும் வகையில் அரசு வாதம்: விசாரணையில் பங்கேற்ற வைகோ பேட்டி

மதுரை: விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவதற்கு பரிசீலிக்க வேண்டுமென விசாரணையில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். விடுதலை புலிகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை 2 ஆண்டுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்தது, 2014 முதல் 5 ஆண்டுக்கு ஒரு முறை நீடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 5 ஆண்டுகள் தடை முடிவதால், அடுத்து தடையை  நீடிப்பதா? இல்லையா? என்று முடிவு எடுக்க நீதிபதி சங்கீதாசிங்ரா தலைமையிலான சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு தீர்ப்பாயம், மதுரையில் கருத்து கேட்டு விசாரணை நடத்தி வருகிறது. நேற்று 2வது நாள் விசாரணை நடந்தது.

இதில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ் ஈழ ருத்ரகுமாரன் சார்பில் தீர்ப்பாயத்தில், சில வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், “தமிழ் ஈழமே எங்கள் கொள்கையும் நோக்கமும் ஆகும். எனவே விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது” என வாதிடப்பட்டது. தமிழக அரசின் கியூ பிராஞ்ச் எஸ்பி, தமிழ்நாட்டில் தமிழர் விடுதலை படை, தமிழர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மீது குற்றச்சாட்டுகளையும் அதன் நோக்கங்களையும் தெரிவித்தார். அந்த அமைப்புகளுக்கும், விடுதலை புலிகள் அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.

விடுதலை புலிகள் மீதான தடையை நியாயப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் குற்றச்சாட்டுகள் இருந்தன. அந்த குற்றச்சாட்டுகள் போலீஸ் வாக்குமூல அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. சமூக நீதி அழிந்து விடக்கூடாது என்ற அடிப்படையில், விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க பரிசீலிக்க வேண்டுமென்ற எனது கருத்தை தெரிவித்தேன். விடுதலை புலிகள் குறித்து சிலர் தவறாக பேசுவதால், அந்த அமைப்பு மீதான தடையை நீக்க கோரும் விசாரணையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தீர்ப்பாய விசாரணை மீண்டும் நாளை(அக்.21) நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Vaiko LTTE ,Vaiko , Liberation, Prohibition, Justification, Government Argument, Inquiry, Vaiko Interview
× RELATED பட்டாசு வெடிக்க தடை நீட்டிப்பு