×

ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகாதது ஏன்? கே.எஸ்.அழகிரி கேள்வி

நெல்லை: ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகாதது ஏன்? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற அச்சத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில், ஜெயலலிதாவின் மறைவிற்கு திமுகவும், காங்கிரசும் தான் காரணம் என அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது துறைகளை பொறுப்பேற்று கவனித்து வந்தவர் ஓபிஎஸ். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றவரும் ஓபிஎஸ். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று தர்ம யுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘ஒரு மனநோயாளி போல ஓபிஎஸ் பேசி வருகிறார்’’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார். சசிகலா முதல்வராக பதவி ஏற்பது உச்சநீதிமன்ற ஆணையினால் தடுக்கப்பட்ட பின்னர், ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடியும், ஓபிஎஸ்சும் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்தார்கள். முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவிகளை பகிர்ந்து கொண்டு அதிமுக ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.

ஜெ. மரணம் குறித்து பல்வேறு விதமான சந்தேகங்களை எழுப்பிய துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 6 முறை சம்மன் அனுப்பியது. ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகி மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதற்கு முன் வராதது ஏன்? ஜெ. மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், முன்னாள் மத்திய அ மைச்சர் சிதம்பரமும் தான் காரணம் என்று கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. இத்தகைய கோயபல்ஸ் பிரசாரத்தின் மூலம் வாக்காளர்களை ஏமாற்ற முடியாது.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த வாழை விவசாயிகளிடம் பயிர் காப்பீட்டு திட்டத்தின்படி ஒரு வாழைக்கு ரூ.14 பிரிமியம் வசூலிக்கப்பட்டது. இதில் தமிழக அரசு ரூ.7, விவசாயிகள் ரூ.7 என செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் இயற்கை சீற்றத்தின் காரணமாக காற்றடித்து வாழை மரங்கள் வீழ்ந்த போது, ஒரு வாழைக்கு ரூ.2.50 தான் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனால் நெல்லை மாவட்ட வாழை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விவசாயிகள் இந்தப் பகுதியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடுகிறார்கள்.

அவற்றை பதப்படுத்தி, நல்ல விலைக்கு விற்பதற்கு தேவையான குளிர்சாதன கிடங்கு இந்த தொகுதியில் இல்லை. இதை அமைத்துத் தர அதிமுக அரசு முன்வரவில்லை. நாங்குநேரியில் வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் தொழிற்சாலைகள் இல்லை. திமுக ஆட்சியில் நாங்குநேரியில் அமைப்பதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமையவிடாமல் அதிமுக ஆட்சியால் முடக்கப்பட்டது. முறையான தொழில் வளர்ச்சி  இல்லாத காரணத்தால் வேலைவாய்ப்பு பெருகவில்லை. எனவே மக்களின் தே வைகளையும், எதிர்பார்ப்புகளையும் புரிந்து கொண்டு மக்கள் நலன் சார்ந்த ஒரு நல்லாட்சி 2021ல் அமைவதற்கு நாங்குநேரி தொகுதி வாக்காளர்கள், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து, காங்., வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் ஆதரவு அளித்து அமோக வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : inquiry commission ,J ,OPS Arumugasamy ,death , J. Mystery in death, OPS Arumugasamy, Inquiry Commission, Why not appear ?, KSAlagiri, Question
× RELATED வங்கி ஊழியர் மர்மச்சாவு