×

ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரையில் தூய்மை பணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு ஆண்டு தோறும் ஒரு கோடிக்கும் மேல் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் இங்குள்ள கடலோர பகுதிகள் எப்போதும் தூய்மையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். ராமேஸ்வரம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் நேற்று மாவட்ட தூய்மை சேவை இயக்க திட்டத்தின் சார்பில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் நடைபெற்ற தூய்மை பணியை ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அரிச்சல்முனை, தனுஷ்கோடி பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியில் பல்வேறு அமைப்பினர்கள் ஈடுபட்டனர். பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்தும், கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது குறித்தும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் பாலிதீன் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் பிரதீப்குமார், மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய மேலாண்மைக்குழு உறுப்பினர் முரளீதரன், ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார், நகராட்சி பொறியாளர் அய்யனார், சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது: மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் சுற்றுச்சூழல் சுகாதார மேம்பாடு, பிளாஸ்டிக் பாலிதீன் ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சசிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு துறைகளின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புனித்த தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்திற்கு ஆண்டு தோறும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனடிப்படையில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, அக்னிதீர்த்த கடற்கரை பகுதிகளுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால் இக்கடற்கரை பகுதிகளை தூய்மையாக பராமரித்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

Tags : Rameshwaram ,Dhanushkodi Beach Cleaning Mission: Collector Launches. Rameshwaram , Rameshwaram, Dhanushkodi, Beach, Cleaning, Collector, Launches
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு:...