×

தேனி மாவட்டத்தில் வாய்ப்புற்றுநோய் அபாயம்: மருத்துவ, சுகாதாரத்துறைகள் அலறல்

தேனி: தேனி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா வர்த்தகம் தடையின்றி நடப்பதால், வாய்ப்புற்று நோய் பெருகும் அபாயம் உள்ளதாக மருத்துவ, சுகாதாரத்துறைகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளன. தமிழகம் முழுவதும் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. அதேபோல் கஞ்சா கடத்தல், விற்பனையினை தடுக்க போலீசில் தனிப்படை பிரிவு செயல்பட்டு வருகிறது. எனினும் தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா தடையின்றி கிடைக்கிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு சென்று சேரும் அளவிற்கு இந்த பொருட்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. சின்னமனுார், மார்க்கையன்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்த வியாபாரம் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளது என்றே பல பள்ளிகளின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மருத்துவ- சுகாதாரத்துறை, போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என ஆசிரியர்கள் வெளிப்படையாகவே புலம்புகின்றனர். கேரளாவில் இருந்து கம்பம் வழியாக அதிகளவு கஞ்சா கடத்தி வரப்படுவதும் இதற்கு முக்கிய காரணம்.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கலப்படம் இல்லாத தனி கஞ்சாவை புகைத்தாலும், வாயில் வைத்து மென்றாலும் புற்றுநோய் வராது. ஆனால் கஞ்சா மூலம் பயன்படுத்துபவர்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றம் அவரது வாழ்க்கையை அழித்து விடும். எனவே தான் அரசு கஞ்சா பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனை விட பெரிய அபாயம் கஞ்சா விற்பனை செய்பவர்கள் அத்தனை பேரும், கஞ்சாவுடன் புகையிலை கலந்தே விற்கின்றனர். இரண்டும் கலந்து பயன்படுத்தும்போது, அதனை புகைப்பவர்களுக்கோ, வாயில் வைத்து சுவைப்பவர்களுக்கோ புற்றுநோய் வரும் வாய்ப்புகள் பல மடங்கு அதிகரித்து விடும். புற்றுநோயுடன் அவர்கள் தன் நிலையும் மறந்து விடுவதால் (நிரந்தர மதிமயக்கம்) அவர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பத்தை வார்த்தைகளில் கொண்டு வர முடியாது. அந்த அளவிற்கு பாதிப்புகள் கடுமையாக இருக்கும். தவிர தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தற்போது பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகிறது. சில புகையிலை பொருட்கள் டீ பாக்கெட் போன்று மிகச்சிறிய அளவில் பேக்கிங் செய்து விற்பனை செய்கின்றனர்.

இதனை பலரும் வாங்கி உள்நாக்கின் அடியில் வைத்து கொள்கின்றனர். குறிப்பாக பஸ், மினி பஸ், கனரக போக்குவரத்து வாகனங்கள் இயக்கும் டிரைவர்கள், கட்டுமான - விவசாய தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் அத்தனை பேருக்கும் நிச்சயம் வாய் புற்றுநோய் வரும். இந்த உமிழ்நீர் விழுங்கும்போது வயிற்றுக்குள் சென்று வயிற்று புற்றுநோய், கல்லீரல், கணைய புற்றுநோய்களையும் உருவாக்கும். இதனாலயே அரசு இந்த விற்பனையினை தடை செய்துள்ளது. ஆனால் தேனி மாவட்டத்தில் இந்த தடையினை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தற்போது பள்ளி மாணவர்களுக்கு மிக, மிக எளிதாக கிடைக்கும் அளவிற்கு இந்த புகையிலை பொருட்கள், புகையிலை கலந்த கஞ்சா பொருட்கள் தடையின்றி வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இதை தடுக்க மாவட்ட நிர்வாகமோ, போலீஸ் நிர்வாகமோ அவர்களின் நிர்வாகத்தின் கீழ் வரும் சம்பந்தப்பட்ட துறைகளின் அரசு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தேனி மாவட்டம் பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு கூறினர்.

Tags : Theni District: Medical and Health Departments ,Theni District of Opportunity in Risk: Medical and Health Departments , Theni District, Opportunity, Risk, Medical, Health Departments, Howl
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி