×

‘கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்’ சர்வதேச சிலம்ப போட்டியில் மாணவி சாதனை: வில்வித்தையும் விட்டுவைக்கவில்லை

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவி மலேசியாவில் நடந்த சர்வதேச சிலம்ப போட்டியில் வெள்ளி வென்று சாதித்துள்ளார். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, காந்தி மைதான வீதியை சேர்ந்த கணேசன் - நர்மதாதேவி தம்பதியின் ஓரே மகள் காருண்யாதேவி(15). பத்தாம் வகுப்பு மாணவி. கணேசன் கல்லூரியில் படிக்கும்போதே சிலம்பம் மாஸ்டராக இருந்துள்ளார். இதனால் குழந்தை பருவத்தில் இருந்தே காருண்யாதேவிக்கு சிலம்பம் மேல் ஆர்வம் அதிகரித்தது. தனது சிலம்ப பயிற்சியை கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கினார். பின்னர் போடி குரங்கணி, மதுரையில் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

முதன்முதலாக தான் பங்கேற்ற போடியில் நடந்த மாவட்ட சப்-ஜூனியர் போட்டியில் தங்கம் வென்றார். தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகளில் தொடர் தங்கப்பதக்கம், ஓசூர், ஈரோடில் நடந்த மாநில சிலம்ப போட்டியில் தங்கம் வென்றார். மேலும், அரவக்குறிச்சி, சென்னை ஆலந்தூரில் நடந்த தேசிய சிலம்ப போட்டியில் தங்கம் வென்று சாதனை மேல் சாதனை படைத்தார். குதிரையேற்ற வில் வித்தை போட்டியையும் விட்டு வைக்கவில்லை. கோட்டம் மற்றும் மாநில அளவில் நடந்த வில் வித்தை போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை தட்டி சென்றார். ஒரே நாளில் 3 தங்கங்களை வென்று அசத்தினார். தேசிய அளவிலான இவரது சாதனை, சர்வதேச அரங்கிலும் தடம் பதிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

கடந்த செப்.15ம் தேதி மலேசிய தலைநகர், கோலாலம்பூரில் சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் காருண்யாதேவியும் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். அடுத்த முறை கட்டாயம் தங்கம் வெல்வேன் என துடிப்போடு கூறி வருகிறார். காருண்யாதேவி இதுவரை 10 தங்கம், 3 வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது பரதநாட்டியமும் பயின்று வருகிறார்.

Tags : International international chic competition, student, achievement, archery, not giving up
× RELATED 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்:...