×

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு மதுரை வைகை ஆற்றில் நீதிமன்ற குழு அளவீடு: ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு

மதுரை: ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் மதுரை நகரில் வைகை ஆற்றின் பரப்பளவு குறித்து நீதிமன்ற குழுவினர் அளவீடு செய்தனர். மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இவற்றின் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் தண்ணீர் தேக்க முடியாமல், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். மேலும் நீர்நிலைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களால் நீர், நிலத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. வண்டியூர் கண்மாய் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழி தடங்களிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோருக்கு பட்டா உள்ளிட்ட அரசின் சலுகைகள் வழங்கக்கூடாது. மின் இணைப்பு, வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும். ஐகோர்ட் கிளை எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதியிலுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், மூத்த வக்கீல் வீராகதிரவன் தலைமையில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக ஒரு குழு அமைத்தனர். இந்த குழுவினருக்கு மதுரை நகரில் வைகை ஆற்றில் ஆரப்பாளையம் பாலம் முதல் தெப்பக்குளம் பிடிஆர் பாலம் வரையிலுள்ள வைகை ஆற்றின் பரப்பளவு எவ்வளவு என்பதையும், அதன் எல்லை குறித்தும் ஆய்வு செய்து அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து மூத்த வக்கீல் வீராகதிரவன் தலைமையிலான குழுவினர், நேற்று காலை மதுரை விளாங்குடி பகுதியிலுள்ள வைகை ஆற்று பகுதியில் இருந்து தங்களது ஆய்வை துவக்கினர். தொடர்ந்து பல பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர் மாலை விரகனூர் பகுதியில் ஆய்வு செய்தனர்.

இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்ரமணியன், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சேதுராஜன், ஆர்டிஓக்கள் முருகானந்தம், கண்ணகி, தாசில்தார் கோபி, மாநகராட்சி பொறியாளர் முகேஷ்பாண்டியன், சர்வே உதவி இயக்குநர் திரவியம், வக்கீல் முரளி, திருநாவுக்கரசு, ராம்சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மூத்த வக்கீல் வீராகதிரவன் கூறுகையில், ‘‘மதுரை நகருக்குள் வைகை ஆற்றின் எல்லையை வரையறை செய்ய வேண்டியது அவசியம். ஆவணங்களின்படி நீளம், அகலம் எவ்வளவு என்பது தெரியவந்தால், தற்போது எவ்வளவு ஆக்கிரமிப்பில் உள்ளது என்பது தெரிந்துவிடும். இதன்பிறகு வைகையின் எல்லை எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து விடலாம். பின்னர் அதனுடன் சேர்த்து வைகை ஆற்றின் தற்போதைய பரப்பளவு, ஆக்கிரமிப்பு விபரம் உள்ளிட்டவை குறித்து அறிக்கையாக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்’’ என்றார்.

Tags : Vaigai ,Madurai ,water bodies , Water Quality, Disposal, Case, Madurai, Vaigai River, Court Panel Measurement, Icort Branch, Report Filed
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர்...