×

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் வீரமரணம்: தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய ராணுவம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் தாங்தார் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக வைத்துள்ளது. தீவிரவாதிகளை வேறு பகுதியில் ஊடுருவ வைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அவ்வப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி கவனத்தை திருப்பும் செயலில் ஈடுபடும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், டங்தார் செக்டார் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்கு உதவி செய்யும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் ஒருவரும் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பகுதியில், இந்திய ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய இந்த அத்துமீறிய தாக்குதலில் 2 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : soldiers ,Indian ,Pakistani ,border ,Jammu ,Kashmir ,Indian Army 2 ,Indian Army , Jammu and Kashmir, Pakistani Army, Heroic Death, Indian Army
× RELATED 40 வீரர்களை பலி கொண்ட புல்வாமா...