×

இந்திய வீரர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் அமித்ஷாவுடன் பேசி தீர்வு காணப்படும்: வங்கதேச உள்துறை அமைச்சர் பேட்டி

கொல்கத்தா: `இந்திய வீரர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தேவைப்பட்டால் இந்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் பேசி தீர்வு காணப்படும்’ என்று வங்கதேச  உள்துறை அமைச்சர் அசாதுஜாமன் கான் தெரிவித்துள்ளார். மேற்கு  வங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த மீனவர் ஒருவரை வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் சிறை பிடித்ததால் அவரை மீட்க இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் படகில் சென்றனர்.  அப்போது, வங்கதேச வீரர் சயீத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்,  இந்திய வீரர் விஜய் பான் சிங் படகிலேயே கொல்லப்பட்டார். படுகாயமடைந்த மற்றொரு இந்திய வீரர், சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இப்பிரச்னை பற்றி வங்கதேச உள்துறை அமைச்சர் அசாது ஜாமன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா-வங்கதேசம்  பாதுகாப்பு படைகளுக்கு இடையேயான உறவு மிக சிறப்பாக உள்ளது. தற்போது, இந்திய  வீரர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இரு படைகளுக்கு  இடையில் ஏற்பட்ட தவறான புரிதலால் நடந்த இச்சம்பவம் குறித்து, இரு நாடுகளின்  பாதுகாப்பு படைத் தலைவர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண  வேண்டும்.
இது போன்ற தவறு மீண்டும் நடக்காமல் இருக்க உரிய  நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் இந்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசி தீர்வு காணப்படும்.

கைது செய்யப்பட்ட  மீனவர் விதிகளின்படி விடுதலை செய்யப்படுவார். இந்த விவகாரம்  பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது. இதனால், இந்தாண்டு இறுதியில் டெல்லியில் நடைபெறவிருக்கும் இருநாடுகளின் பாதுகாப்பு  படைத் தலைவர்கள் சந்திப்புக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று நம்புகிறேன். எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இடையேயான பிரச்னையை கண்டறிந்து, அதை இரு நட்பு நாடுகளும் அமைதியான முறையில் தீர்வு காண முயற்சி  எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்திய, வங்கதேச நாடுகளின்  பாதுகாப்பு படைத் தலைவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை, தாகாவில் உள்ள  வங்கதேச பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Amit Shah ,Amit Shah: Interview ,shooting death ,Indian ,Home Minister ,Bangladesh , Indian player, Amit Shah, Home Minister of Bangladesh
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...