மகளின் முறை தவறிய காதலை கண்டித்த தாய் படுகொலை

திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே விளாங்குடியை சேர்ந்தவர் மகேஸ்வரி (37). இவரது கணவர் அறிவழகன் இறந்து விட்டார். மகேஸ்வரி விளாங்குடி பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது ஒரே மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தாயும், மகளும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை மகேஸ்வரி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தினரிடம் மகள் தெரிவித்தார். மகேஸ்வரி தலையில் இரும்பு கம்பியால் அடித்த காயம் இருந்தது.

தகவல் அறிந்து வந்த திருவையாறு போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அறிவழகனின் அண்ணன் வீடு அதே  பகுதியில் உள்ளது. அவரது மகன் ஆனந்தராஜ் (25), வெல்டிங் பட்டறையில் வேலை  செய்து வந்தார். இவரை தனது மகள் முறைதவறி காதலித்ததை  மகேஸ்வரி கண்டித்துள்ளார். ஆனால் காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வதற்கு  ஏற்ப  அண்ணன், தங்கை முறையான இருவரும் யாரின் அறிவுரையையும் கேட்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆனந்தராஜ், தங்கை முறையான பெண்ணை கூட்டிக்கொண்டு வெளியூர் ஓடிவிட்டார்.

இது குறித்து மகேஸ்வரி திருவையாறு போலீசில் புகார்  செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனர். ஆனந்தராஜ் சில தினங்களுக்கு முன் ஜாமீனில்  வெளியே வந்தார். இந்நிலையில் மகேஸ்வரி கொலை செய்யப்பட்டுள்ளதால் போலீசார் ஆனந்தராஜை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதை அறிந்த மகேஸ்வரியின் மகள் தப்பிச்சென்று விட்டார். அவரை  போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>