வாட்ஸ் அப்பில் வதந்தி இருமல் மருந்தை பாலில் கலந்து கொடுத்தால் விஷமாகுமா?.. அரசு மருத்துவர் விளக்கம்

சென்னை: இருமல் மருந்தை பாலில் கலந்துகொடுத்தால் விஷமாகாது என்று அரசு குழந்தைகள் நல மருத்துவர் நாராயணபாபு கருத்து தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரப்படும் கருத்துக்களின் உண்மைத்தன்மையை கண்டறிவது கடினமான விஷயம். இதற்கு காரணம் அந்த பதிவை முதன்முதலில் பகிர்ந்தவருக்கு மட்டுமே அது உண்மையா இல்லையா என்பது தெரியும். மற்றவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உதவுவதாக நினைத்து, சமூகத்துக்கு செய்யும் சேவையாக நினைத்து குறிப்பிட்ட பதிவை பகிர்கிறார்கள். சமூக வலை தளங்கள், சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகளின் உண்மைத்தன்மையை நம்மால் உறுதிப்படுத்த முடியாது என்பதால், அவற்றை பலர் பகிர்வதில்லை. ஆனால் ஒரு சாரர் அவற்றை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ‘‘எச்சரிக்கை! எச்சரிக்கை!! சென்னை அருகே ஒரு கணவன் மனைவிக்கு 4 குழந்தைகள் என தொடங்கும்’’ பதிவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்பட பல்வேறு ஊடகங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில் ‘‘இருமல் மருந்து மிகவும் கசப்பாக இருந்ததால் குழந்தைகள் குடிக்க மறுத்ததாக சொல்லப்பட்டுள்ளது. பாலில்  இருமல் மருந்தை கலந்து 4 குழந்தைகளுக்கு தாய் அளித்ததாக கூறப்பட்டுள்ளது. மறுநாள் காலையில் 4 குழந்தைகளும் இறந்துகிடந்ததாகவும், டாக்டரிடம் குழந்தைகளை கொண்டு சென்றபோது, இருமல் மருந்து பாலில் கலந்தால் விஷமாகிவிடும் என்று டாக்டர் சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது. நீங்களும் அந்த டாக்டரை போல, உயிர்பலி ஆகும் வரை காத்திருக்க வேண்டாம். உங்களுக்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோருக்கும் பரப்புங்கள்.

இருமல் டானிக்கை பாலில் கலந்தால் அது விஷம். யாருக்கும் எப்ேபாதும் ெகாடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டீர்களா. மிக்க நன்றி’’ என்று அந்த பதிவு முடிகிறது. இதுதொடர்பாக மூத்த குழந்தைகள் நல மருத்துவரான சென்னை ஒமந்தூரார் மருத்துவக்கல்லூரி முதல்வரும் கூடுதல் மருத்துவக்கல்லூரி இயக்குனருமான நாராயணபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இருமல் மருந்தை பாலில் கலந்துகொடுத்தால் விஷம் ஆகாது. உணவுப்பொருட்கள், மருந்து உள்பட நாம் சாப்பிடும் அனைத்தும் இரைப்பையில் செரிமானம் ஆகும்போது, ஒன்றோடொன்று கலந்தே இருக்கும். இருமல் மருந்தை தண்ணீர், சுடுதண்ணீர், பால், மோர், தேன் என வழக்கமாக நாம் உட்கொள்ளும் திரவ உணவுப் பொருட்களில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம், அது விஷம் அல்ல.

இதுபோன்ற பதிவுகளின் உண்மைத்தன்மையை அறியாமல் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பகிர வேண்டாம். உண்மை என்று உறுதிப்படுத்திக்கொண்டபின் தாராளமாக பகிருங்கள். அது மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும். இவ்வாறு மூத்த குழந்தைகள் நல மருத்துவர் நாராயணபாபு கூறினார்.

Tags : Whats up, cough medicine, government doctor, description
× RELATED குன்னத்தூரில் தென்னங்கருப்பட்டி வரத்து அதிகரிப்பு