வடகிழக்கு மழையை எதிர்கொள்ளுமா சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்?

* ஸ்டேஷன்களில் மழைநீர் கசிவு அதிகரிப்பு

* நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் மழைநீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. வண்ணாரப்பேட்டை வரை முதல் திட்டம் முடிந்ததையடுத்து நாள்தோறும் 1 லட்சம் பேர் வரையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அப்போது மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் ஏற்பட்ட மழைநீர் கசிவால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது.

இப்போதும் பல மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கம் போல் மழைநீர் கசிவு ஏற்பட தொடங்கிவிட்டது. சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களில் மழைநீர் கசிவை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சுவர்கள் பாழாகி வருகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்கள் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பெரும் அவதியடைந்து வருவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்ட்ரல், அண்ணாநகர், பச்சையப்பன் கல்லூரி, வடபழனி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மழைநீர் கசிவு அதிகமாக உள்ளது.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின் உபகரணங்கள் இருக்கும் அறைகளுக்குள் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளதால் மின்விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பல நிலையங்களில் மழைநீர் உள்ளே வருவதை தடுக்க பக்கெட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் 5 நாட்கள் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் நிலையங்களில் மழைநீர் கசிவை சரிசெய்ய நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

More
>