மோடி-ஜின்பிங் ஒன்றாக போட்டோ எடுத்ததன் எதிரொலி: வெண்ணை உருண்டை கல் பகுதியை பார்வையிட ரூ40 கட்டணம் நிர்ணயம்

* ஒரே டிக்கெட்டில் 3 இடங்களை பார்க்கலாம்
* தொல்லியல் துறை அறிவிப்பு

சென்னை: மோடி-ஜின்பிங் ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டதன் எதிரொலியாக வெண்ணைய் உருண்டை கல் பகுதிக்கு செல்லவும் போட்டோ எடுக்கவும் ₹40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு  3வதாக ஒரு டிக்கெட் கவுன்டர் திறக்கப்பட்டு உள்ளது. உலக புகழ்பெற்ற மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணைய் உருண்டை கல் உள்பட பல்லவர் காலத்து புராதன சின்னங்களை காண பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம் வந்தனர். அப்போது அங்குள்ள கடற்கரை கோயில், 5 ரதம் மற்றும் அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளை பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விளக்கினார்.

அங்குள்ள வெண்ணை உருண்டை கல் அருகே இரு தலைவர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு மாமல்லபுரம் சுற்றுலா தலம் களைகட்டி வருகிறது. தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில், மாமல்லபுரம் சிற்பங்களை காண கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய பகுதிகளில் இந்திய தொல்லியல் துறை சார்பில், டிக்கெட் கவுன்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துவருவதால் வெண்ணைய் உருண்டை பாறை அருகே 3வது டிக்கெட் கவுன்டர் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வெண்ணைய் உருண்டை கல் பகுதியை இலவசமாக மக்கள் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக வெண்ணைய் உருண்டை கல் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுன்ட்டரில் டிக்கெட் வாங்கினாலும், அனைத்து இடங்களையும் பார்வையிடலாம். சிற்பங்களை பார்வையிட உள்நாட்டு பயணிகளுக்கு தலா நபருக்கு ₹40, வெளிநாட்டு பயணிகளுக்கு ₹600 என தொல்லியல் துறை சார்பில் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

Tags : Modi-jinping, butter orb, fare
× RELATED ஆப்கன் ராணுவத்திடம் சரணடைந்த ஐஎஸ்...