தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை எதிரொலி: ஆம்னி பஸ் கட்டணம் கடும் உயர்வு... போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் தங்கி உள்ளனர். தீபாவளி வரும் ஞாயிற்றுகிழமை வருவதால் ஏராளமானவர்கள் ரயில், பஸ், விமானங்களில் ரிசர்வேஷன் செய்துள்ளனர். தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 10,940 பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் பலர் ஆம்னி பஸ்களை நோக்கி செல்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தடுக்க போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே திடீர் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும், ஆம்னி பஸ்களில் சனி, ஞாயிறு தினங்களில் கட்டணமாக, ரூ600-1500 வரையிலும், சென்னை - கோவைக்கு இயக்கப்படும் வண்டிகளில், ரூ700 - 1,700 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆயுத பூஜையின்போது கட்டணம் பல மடங்கு உயர்ந்தது. தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் சென்னையிலிருந்து மதுரைக்கு தற்போது ரூ1,700-ரூ2,500 வரையிலும், சென்னை-கோவைக்கு ரூ1,700-2,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு முக்கிய ஊர்களுக்கும் கட்டணம் அதிகமாகவுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தீபாவளி பண்டிகையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடமிருந்து புகார் வருகிறது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட பஸ்கள் சென்று கொண்டிருக்கும்போதே பாதி வழியில் நிறுத்தி, திடீர் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம். அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் ஒருசிலர் பழைய மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத பஸ்களை கொண்டுவந்து இயக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதைக்கருத்தில் கொண்டு, திடீர் சோதனையில் போது வாகனங்களின் ஆவணம் முறையாக உள்ளதா என்பது குறித்தும் சோதனை ெசய்யப்படும். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ஆய்வு செய்யப்படும். மேலும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags : Special Committee ,Omni ,Transport Department. Diwali , Diwali festival, Omni bus, fare increase
× RELATED சேலத்தில் மதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொது கூட்டம்